வெள்ளி, 31 டிசம்பர், 2010

நீயுருட்டும் சொற்கள்


-ந.மயூரரூபன்



பொறுக்கியெடுக்கும் சொற்களை
எங்கள் முட்படுக்கையெங்கும்
பரவவிடுகிறாய்.
பழைய வாசனைபடிந்த
தந்திரமற்ற உன் சொற்களில்
எங்களினுயிர்ச் சூடு
பட்டுக்கொண்டேயிருக்கிறது.

அன்பும் பாசமும்
இரைக்குடலில் ஓய்ந்து
ஒய்யென ஒளிகிறது.
முட்படுக்கை விரிப்பிலிருந்த
பசியின் வேட்கை
மறைப்பற்று வெற்றுவெளியெங்கும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

இரக்கமும் கருணையும்
பேய்ப்புனலில் குளித்த களைப்பில்
புலன் மயங்கித்திரிகிறது.
ஏந்த நீளும் கைகளொவ்வொன்றும்
வெற்றுச் சொற்களையே
அளைந்தள்ளுகிறது.

நீயுருட்டிய சொற்களின் பொதி
அவிழ்ந்துகொண்டேயிருக்கிறது.

ஈரமற்ற சொற்கள்
உன்மூச்சுடன்
புணர்ந்துகொண்டேயிருக்க
எங்களின் உடற்சூடு
அடங்கிக்கொண்டேயிருக்கிறது.


31122010

புதன், 3 நவம்பர், 2010

பூராயம்


-ந.மயூரரூபன்



விழி விரிய விரியப் பார்க்க
இதென்ன விளங்காப் பூராயமோ
படையெடுக்கும் வாகனங்களில்
பரவசமாய் வீரங்கிளர
மூத்திரக் குடிலிருந்த ஒதுக்கையும்
புகுந்து முகர்ந்து பாக்குமிந்த
விலைபோன பூராயம்.

நிலம் வரண்டு
மனங்கிழிந்து
குடல்காயக் கிடக்கும்
மூச்சுக்களொன்றும்
உங்கள் பூராயவெளியி்ல்
மோதவில்லை.

மதர்த்த உங்களின் புதினங்களையே
வாகனங்களில் காவித் திரிகிறீர்கள்.

உலைந்த நிலத்திலும்
கிழிந்த கோவணத்திலும்
இந்தப் புதினங்களையே
விட்டுச் செல்கிறீர்கள்.

எங்கள் புதினங்கள்
புழுதி குளித்தபடி
எங்களுடனேயே கிடக்கிறது.


04112010.

திங்கள், 1 நவம்பர், 2010

சிலந்தி


-ந.மயூரரூபன்



குருட்டுச் சுணைகளின் மடல்கள்
நான் நடக்கும் இழைவழியெங்கும்
முறைகெட்டுக் கொட்டுகிறது.
வழிபுனையுமந்த இழை
தன் இரகசிய நினைவுள்
மரணம் வாசம் மிஞ்சிய
கருப்புக் குகையுள்
சிலந்தி தெரியா வலையை
பிணைந்துகொள்கிறது.

முட்களில் குந்தும் மனதை
மறைத்து மூடும் மடல்கள்
செத்து வீழுமென்னை
ஒவ்வொரு கணமும்
இழைவழின் இரகசியத்துள்
புதைத்துப்பின் சிரிக்கிறது...
என்னுடன் குனிந்தழுகிறது.

வடதிசைக் காவலனின்
சவப்பெட்டி நிறையும் ஆரவாரத்துடன்
நீங்கள் வருகிறீர்கள்...
எனக்கான இழைவழியில் பார்த்திருக்கிறேன்
குருட்டுச்சுணை மடல்களுடன்.

இரகசிய நினைவுள் நீங்கள் போவதையும்
பார்க்க மறுக்கிறேன்...
என் இழைவழி காட்டும் வலைக்கான சிலந்தியை
உயிர்ப்புடன் காவிச் செல்கிறீர்கள் என்பதும்
எனக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.


02112010

செவ்வாய், 12 அக்டோபர், 2010

புலன்


-ந.மயூரரூபன்



வயிற்றால் ஊர மனமின்றி
நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு.
வீங்கிய வயிற்றுள்
செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய
 பொறிகளைந்தும்
பதனமழியக் கிடக்கிறது.

தனிமை நெடுத்துப்
புலம்பியழும் புலன்களினோடை
மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது.
பறவைகளிறங்காப் புதர்கள்
என் புலன்மூடிப் புனையும் பொழுதொன்றிலும்
அது தன்வழியிடை
இறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஓடை நனைக்கும் காற்று
என் புலன்குடித்து மயங்க
பதனமழிந்த என்பொறிகளைக் கக்கிய பாம்பு
ஓடை வழிதேடி ஊர்கிறது.


12102010

வெள்ளி, 8 அக்டோபர், 2010

இருள் மரம்


-ந.மயூரரூபன்



களைத்து விழுந்திருக்கும்
வெளிச்சத்தினலைவுகள்
கோழையாய்த் தீய்ந்து போகிறதிங்கு.

சித்திரங் கரிந்த நிலத்துள்
தீக்குணந் தின்னும்
கருங்காட்டு வெளியில்
சஞ்சலமறுந்துபோய்ப் படுத்திருக்கிறேன்.

என்னுடல் தின்னுங்குறி
கருங்காட்டு இருள் சப்புகிறது.
அது துப்பிய வெளியில்
அச்சம்பெருக்கும் இருள்மரம்
வளர்ந்தோங்குகிறது.

உயிருரிந்த பின்னும்
இச்சையுறிஞ்சும் உன்குறியால்
களைத்து விழுந்த
வெளிச்சத்தினுடல் புணரப் புணர
விழுந்து கொண்டேயிருக்கிறது இருள்.

08102010

உண்மை



-ந.மயூரரூபன்



காலம் உந்நிழல் மீது மிதித்தபோது
நீயெறிந்த அக்கல்
குளத்தில் வீழ்கிறது ஆழ.
வழுவழுப்பற்ற அந்தக்கல்
என் பொழுதைக்
காயப்படுத்திச் செல்கிறது.

கல்லால் முளைக்கும்
நீர்வளையங்கள்
கல்லைப்பற்ற நீளும்
என்கரங்களை ஒதுக்கித் தள்ளுகின்றன.

குளிரற்றும் கூரற்றும்
அசையும் வளையங்கள்
பொசுங்கிப் போகின்றன
என்னுணர்வுகளில்...
கல்லைப் பற்றித் தொடர்கிறேன்.

மெய்யுறைந்து பாரமேறிய கல்
கீழே வீழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

பற்றிய பின்னாய்
விளைந்துகொள்கிறது
கல்லின் பாரம் எனக்குள்ளும்.
மெய்யுடன் விழுந்துகொண்டேயிருக்கிறேன்
இருள் சறுக்கும் ஆழத்துள்.


08102010

புதன், 29 செப்டம்பர், 2010

எங்கள் வாழ்வு






-ந.மயூரரூபன்




மரணப் பொறிகள்
கடலோரம் படுத்திருக்க
சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகப்போன கணத்தில்
உயிர் சிந்தச் சிந்த
விழுந்து போனோம்.

உறவுகள் இறைந்துபோன
எம்நிலத்தில்
 நிலக்கண்ணிப் பொறிகளும்
ஊனுறுஞ்சும் கங்குல்களும்
தம் பொழுதுகளை
விழுத்தியிருக்க
மீண்டு்ம் எழுந்துகொள்கிறோம்...
வியக்காதிருங்கள் சோதரரே!




29092010

சனி, 11 செப்டம்பர், 2010

..................................


-ந.மயூரரூபன்



என்னை மூடிச்
சேர்ந்துபோன இலைகளெல்லாம்
உயிர் வரண்டுபோய்
என்மீது மோதுகின்றன.

உன்னினைவில் நனைந்து
வரளாதிருக்கும் என்னுயிர்
அந்தச் சருகுகளுடன்
இன்றும் உன்னைப்பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறேன்.

மகனே!
காயா நினைப்பெல்லாம்
உன்னால் அலைவுறும்
காற்றுக்குத் தெரியுமென
காத்திருக்கிறேன்.

மூவாறு மாதங்கள்
உன்மூச்சு உலவுமிடமறியாது
சித்தமழிந்து
கிழி சீலையானேன்.

என் கொள்ளிக்குடமுடைப்பான்
என்மகன்.
உயிர் வேகுந்தீ
மூண்டுவிட்டதடா.
நான் பேசிக்கொள்ளும்
சருகுகளெல்லாம்
சிந்தையுறைந்து
எரிகின்றன.

உயிர்மூட்டிய நெருப்பில்
உனக்காய்ச் சுருண்டிருக்கிறேன்
மகனே...


11092010

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இக்குழந்தை


-ந.மயூரரூபன்



நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது.

ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன்வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடார மண்ணுள் விழுகின்றன.

குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின்
எச்சம் மட்டுமே முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.

பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.

தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்துபோகிறது.

தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்தழுகிறது குழந்தை...
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.


07092010

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வலி

-ந.மயூரரூபன்


ஓடிக்கொண்டிருக்கும்
காற்றின் கருக்குகளில்
குந்தியிருக்கிறதுன் மனது.

 

குஞ்சுறை விழுத்திய

கிளைமையற்ற

முள்மறை முக்காடு
மூடித்தங்குகிறதுன்
சைனியத்துள்.

அறுந்துவிழுமொவ்வொரு
சினைகளிலுந் தொங்கி

அந்தரிக்கிறேன் நான்.



24052010

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நிழற்குருதி

-ந.மயூரரூபன்


பொழுதுகள் விழுங்கிடங்கு
வளர்ந்துள்ளோடுகிறது
கட்டைகளடித்த வெண்படங்குள்
பொழுதுகளைத்திணித்து
ஆழ விழுகிறது என் நிழல்.
படங்கின் மூடாப்படலையை
முட்டுகிறது இருள்
எதிர்வரும் நாட்களைச் சப்பியபடி...



மூச்சோய்ந்த நாட்களைச் 

சுமந்துவரும் காண்டாவனம் 

கந்துள் சுமந்து
மோதுகிறதெங்கும்.
எங்கள் கனவுகளின் மிடுக்குகளை
தன் சுழிக்குள் மறித்திழுக்கிறது .
அசைவழிந்த எம் கனவுகள்
புகைபடிந்துபோகின்றன.



சருகுகளொடியும் ஒலி

வழியாப் பாழியினுள்
ஈரம் பதுங்கியிருக்கிறது.
காதுகளறுந்துபோன காற்று
எங்களெரி வனத்தின்
முகந்தீய்த்துப் பார்த்திருக்கிறது.



கண்கள் ஒளித்துக்கொண்ட
சாம்பர்ப் பொழுதுகளை
அழையும் விரல்களோடு
விழுந்துகிடக்கிறது என்னிழல்.
கீறிச்செல்லும் வெயிலிலும்
காயாமல் கசிகிறது
என்னிழலின் குருதி.


03072010

சனி, 7 ஆகஸ்ட், 2010

பொய்



-ந.மயூரரூபன்

மெய்யற்ற தளிர்கள்
பசுமையைப் பறித்தெடுக்கின்றன.
உன்னைச்சூழப் படரும் வெம்மை
உண்மையற்றதென உன்னினைப்பு.

வருங் கணங்களிலெலாம்
மெய்யழிந்த சிறுதுளிர்களைக்
கொழுவி விடுகிறாய்.

தின்னப்பட்ட
உன்னிழல்களின் சுவடுகள்
மறைந்துவிட்ட பொழுதுகளில்
மெய்மறைந்த
நிழல்கள் கறுக்கின்றன.

ஆற அமருவோர் யாருமின்றி
நீயமிழ்ந்திருக்கும்
பொய்வெளியே எங்கும்
சத்தமின்றிப் படருகின்றது.

சுற்றித் துளிர்க்கும்
உன் மெய்யுருவிய பொய்களால்
ஒளி நுளையும் பொட்டுக்கள்
கரையும் பொழுதுகளில்
சத்தமின்றி உன்னைத் தின்கிறது.

வெள்ளி, 25 ஜூன், 2010

குழந்தைகளின் கனவு


-ந.மயூரரூபன்

ஊதி ஊதி மூட்டுந்தீ
குழந்தைகளினுலரும் கனவுகளின்
நுளைவழி தேடிச்சதிராடி
மரவிருள் பிணைந்து தொங்குகிறது.

குழந்தைகளின் கனவுகள் பார்த்திருக்க
ஓடிக்கொண்டிருக்கிறது
அதனீரம் பறித்த மாய ஆறு.
தகிக்குமெங் கனவுகள் தொடமுடியா
மாய ஆறு அது.

ஈரந்தொலைத்த சேதி
ஆற்றுப்படுகையில் விழுந்து
முட்கம்பியோரமாய் திக்கற்றலைகிறது.
மரவிருள் தின்னச் சுருண்டிருக்கிறது.

கனவுகள் உலருமோசை
வண்ணங்கள் புதைந்துபோன
நிலமெங்கும் கேட்கிறது.
மாய ஆற்றின் சலசலப்பும்
உதிர்ந்தழிகிறது.

ஓசைகளுடையும் சடசடப்பில்
மரவிருள் மிடைத்து வருந்தீ
வகுந்தேறுகிறதெங்கும்.
கனல் கக்கும் பொழுதொன்றில்
குழந்தையின் கனவுகள்
தீயில் நனைகின்றன.

வெள்ளி, 18 ஜூன், 2010

குளங்கள் ஊறுகின்றன


--ந.மயூரரூபன்

ஓரம்பிடித்து இழுக்கிறேன்
 நினைவுகளின் செவ்வலியெலாம்
வந்துவிழுகிறது
எனக்குள் ஊறும் இந்தக்குளத்தின்
இரகசியங்களெல்லாம்
விழிமுன் ஒளிக்கும்
ஓரங்களில் படுத்திருக்கிறது.

வந்தணையும் எனக்கான சொற்கள்
செங்களியழைந்து ஊர்கிறது
என்மொழிபிணைந்து
மடை கரைந்தவெண்ணத்துள் சரிகிறது.

இரும்புருளைத் துண்டுகள்
தீயுருக்குக் குண்டுகள்
பெருக்கியிறைத்த செங்களியும்

வளைந்துயிர் அரக்கிய
நினைவு மறுகும் எரிதடங்களும்

உன்னிண வாடை
குவிந்துறையும்வெண்திரைக்குள்
திணிந்து மடங்காதெழும் எப்போதும்.

என்குளம் பெருகும்
காலங்களைச் சபிக்காதே.
பிணச்சீலையெரியும்
எங்களின் கனவுகளைப்பின்ன
இன்னமும் ஓரங்களை இழுக்கிறேன்.

நண்பனே!
உன்முன்னேயும் கண்டுகொள்
நிணவாடை வீசும் ஓரங்களை.
உன்குளமும் காத்திருக்கிறது...





புதன், 16 ஜூன், 2010

நரனெரி கங்கு


-ந.மயூரரூபன்


பேய்கள் தின்றெறிந்த
கொட்டைகள் முளைக்கும்
காலமொன்றின்
உருவிலா வனத்தீயினுள்
கூப்பிய கையுடைந்து
கெஞ்சிய வாய் கிழிந்தடங்கினர்.

உருவிலா வனம் மூட்டும்
நரனெரி கங்கின் புகை
வெளியிடை கசிந்து
மருளும் காற்றுடன் கலக்க
மலக்குழியில் மிதந்தனரென் சோதரர்
உயிர் தொலைத்த புள்ளிகள் கலைய.

நேற்றின் கூர் முனைகள்
காற்றைக் கீறிச்சிவந்தன.
ஒடிமுனை புதைந்த காற்று
அலறிச் சுழன்றோடுகிறது இன்றும்.
கிழிந்து சடசடக்கிறது எங்களின் காலம்.

நரனெரி கங்கின்
புகை சூழ்நிலத்துள்
அள்ளுண்டு போகிறது வாழ்க்கை.
உருவிழந்து தீய்கிறோம் நாம்.

செவ்வாய், 15 ஜூன், 2010

சித்து

-ந.மயூரரூபன்


அசையும் காற்றிலுடைந்து பரவும்
நீருந்தியெழும் பறவையின் சாரலாய்
என்னுலவு கணங்களின்
வனத்தாளுடைந்து கொள்கிறது.
சிறுபறவைகளின் குலாவுகுரல்
நுழைந்தென்னுள் வழிகிறது

என்னுள் பெருகுமுன்னால்
என்னுதிரா வண்ணம்
சுடரேறி விண்ணளைகிறது.
வண்ணவான் படைக்கவெனை
உந்துமுன்னால் இறைகிறதென்னுள்
இம்மை பெருக்கும் சித்து.

திங்கள், 14 ஜூன், 2010

பதற்றம்

-ந.மயூரரூபன்


காற்றுள் குழையும் இருள்
ஈரமாய்த் தன்னுயிர் விரித்து
என் கனவுவெளி மூடிப்பின்னுகிறது
பகல்களற்ற பொழுதுக்குள்
விழுந்து கொண்டிருக்கும்
நினைவுகளின் சொட்டுகள்
மெதுவாய் என்னுயிர் கரைக்க
அழுதலையும் இராக்குருவியின்
பதற்றம் தொற்றித் தொடருகிறதெங்கும்.

வெள்ளி, 11 ஜூன், 2010

விடைத்தலையும் காந்தல்

-ந.மயூரரூபன்


சுற்றிச் சடையும் காந்தல்
தகரத் தடுப்பேறி உடல் வெம்ப
என்னுயிர் விழுங்கிப் படுத்திருக்கிறது - பின்
வயிற்றுள் விடைத்து நெடுக்கிறது.

நினைவுகளின் பசுந்தழல் பொசுங்கும்
தீங்கனவே காற்றுக்கும் தெரிந்திருக்கிறது.
எட்டநின்று தன்சுவடெறிந்து
உயிரழையக் காத்திருக்கும் நாயொன்றின்
மூச்செறிவு மட்டும் முளைக்கிறது.

பசியைக் குதறக்காத்திருக்கும்
குறியொன்றின் நிழல் நிலநடுவில்
நின்று நெடுத்தலைகிறது.
உயிரழையக் காத்திருக்கும்
மூச்செறிவுகளின் வெம்மை
ஊர்ந்தேறுகிறது எங்கும்.

வியாழன், 10 ஜூன், 2010

உயிர் வளையம்

-ந.மயூரரூபன்


வார்த்தைகள் நெருங்கா
வளையத்துள் எங்கள் உயிர்
படுத்திருக்கிறது சோர்ந்து.
நீயெறியும் சொற்கள்
உணர்வுகளறுந்து அம்மணமாய்
திசைகளற்று ஓடியலைகிறது.

எங்களுக்கான சொற்களை
எண்ணியெண்ணி அடுக்குகிறேன்
உயிர் வளையத்துள்.
ஒலிதின்னும் பேய்ச்சுழலொன்று
புலன்மயக்கி ஓடித்திரிகிறது.

உனதுமெனதுமான சொற்கள்
உலர்ந்தபின் உடைந்துபோய்
சத்தமற்று எரிகின்றன.
ஒலியறுந்த நெருப்பினைப் பார்த்தபடியே
படுத்திருக்கிறது எங்களுயிர்.

திங்கள், 7 ஜூன், 2010

அலைவு

-ந.மயூரரூபன்


என்னிலத்து வெளியில் நடக்கிறேன்
புன்னகையில் தொற்றியிருக்கும்
பரிச்சயங்களின் முகம்
ஆழப்புதைந்திருக்க
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...
அந்நியனாய்த் தெரியும் என்முகம்
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...
முகமற்று எனது வெளியெங்கும்
நடந்தலைகிறேன்.

புதன், 19 மே, 2010

நினைவு


-ந.மயூரரூபன்


மெதுவாய் அசையும் நிலவு
ஈரமாய் மனதிலுறைந்து
நினைவுகளை உரசும் மெல்ல மெல்ல...

நதியோரம் உயிர்களறுந்து
சிதைந்தலறிக் கிடந்தபோதும்
நதியலையில் ஆடிச் சென்றாய் நீ.
பார்க்க யாருமின்றி மிதக்கும் வழியில்
எம்மோலத்தை விசிற மறந்து காவிச் சென்றாய்...

இன்றும் பாரமாய்... தளர்வாய்
மிதந்துவரும் உன்னிழல்
ஓலங்களை இறக்கிச் செல்கிறது
தன்னிச்சையாய் என்னுள்...

திங்கள், 17 மே, 2010

........ பூச்சிகள்



-ந.மயூரரூபன்

வண்ணமற்ற வண்ணத்துப்பூச்சிகள்
பறந்துவருகின்றன.
கொத்துக் கொத்தாய்
உயிர்கள் கரைந்துபோன
எங்கள் வெளியெங்கும் தங்கள்
வண்ணமற்ற வண்ணங்களைக் களைந்து
தூவிக் கண்ணீர் சொரிந்தன.

அவலப் பெருவெளியில் புதைந்து போனவர்களே!
சாம்பர் நிலம் இருண்டு போகிறது...
கறுப்பாயக் குவியும் பூச்சிகளால்.
அஞ்சலிக்கும் வண்ணமற்ற பூச்சிகளின்
நடுவிலொரு சுடர்
அலைவுறப் பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு பூச்சிகளும்
தங்களுக்கான வண்ணங்களைத் தேடுகின்றன.

இன்னமும் என்னுள் நிறைந்திருக்கும்
உங்கள் மூச்சுக்களின் கதகதப்பில்
எனது சிறகுகளை ஒட்டுகிறேன்...
என் வண்ணங்களைத் தேடிவர.


18052010

புதன், 5 மே, 2010

மனவெளி

-ந.மயூரரூபன்


எனக்குள் இறங்கும்
வர்ணங்களைக் காணவும்
அது தரும் யௌவனம் வீசும்வெளிகளில்
என்மூச்சின் கதகதப்பினையும்
காண்பதற்காய் தொடரும் நண்பர்களே!

மனதின் ஓரம் இழுப்புண்டு போகும்
சாத்தானின் உயிர்ப்பினையே
எனது உயிரின் முனைகள் கண்டுகொள்கின்றன.
இருளை விசிறிச் செல்லும் ஆண்டவனின் எதிரி
என் நிலமெங்கும்
எங்களின் ஓலத்தையும் விதைத்துச் செல்கிறான்.

சாத்தானின் இருளைத் தொடர்ந்து
கண்ணீரைச் சேர்க்கக்காத்திருக்கும் நண்பர்களே!
ஓல வெளிகளில் பிய்ந்துபோகும்
என் மனவெளிகளில்
ஆண்டவனின் உயிர்ப்பினைத் தேடுகிறேன்...
உங்கள் மனதிலிருந்து
சிறிது சிறிதாய் அதற்கானஒளியைத் தாருங்கள்.





05052010

புதன், 21 ஏப்ரல், 2010

அவிழ்

-ந.மயூரரூபன்



தானாய் அவிழும் முடிச்சுகளில்
முட்டித் துடித்துவரும் ஓலங்கள்
என்காலடிகளைத் தேடி
ஓடிவருகின்றன.

அடக்கம் செய்யப்படாததாய்
சாவறிவித்தல் கொடுக்கப்பட்ட ஓலங்களில்
மரணத்தின் உறவினைக் காணமுடியவில்லை.

எனது முடிச்சு அவிழும் பொழுதுகளில்
அதன் உயிர்ப்பின் கூர்மையை அனுபவிக்கிறேன்
ஓரங்கள் சீவப்பட்ட எனது காலடிகள்
இரத்தத்திலே தோய்ந்திருப்பதாக
அம்மா அழுகின்றாள்.

நான் எனது மண்ணில் நடக்கிறேன்...
வெளியெங்கும் சிவப்பாகும் காலத்தை
நான் என சந்ததிக்காய் வரைந்து கொள்வதாக
நீ சொல்வது எங்கும் கேட்கிறது.

மண்ணின் முடிச்சுகள்
உனக்குள்ளும் அவிழ்ந்து கொள்ளும்.
விட்டு விடுதலையாகும்
ஓலங்களின் தரிசனத்தினை
அப்போது நீயும் வரைவாய்.


17042010

திங்கள், 19 ஏப்ரல், 2010

எரியும் உணர்வும் உதிரும் வர்ணமும்

-ந.மயூரரூபன்

கொலுசுக்குள் உறங்கும்
ஓசைகள் விழிக்குமென
மனமெங்கும் துடிப்புக்கள் உலவும்.
ஓயாத நெஞ்சறையின் படபடப்பு மட்டும்
ஓய்ந்து போன உடலில்
உன்னிப்பாய்க் காதுமலர்த்தும்.

தொலைந்தது கொலுசா கொலுசின் ஒலியா?
புரியாத சூனியத்துள் பார்வை தொலைத்து
பரதேசியாய் அலைகிறது என்னுணர்வு.

முடிந்தவற்றின் வர்ணங்களின்னும் காயவில்லை
ஈரமின்னும் பிணைவறுக்காததாய்
குழைந்து என்னைப் பற்றுகிறது.
ஓர் வாசனை எங்கும் மிதக்கிறது.

ஓசைகளின் விழிப்பில் பதிந்து கிடக்கிறது
என் உயிரின் பார்வை.
வர்ணங்களின் குழையலை மனது நுகர்கிறது...
வாசனையின் ஈர்ப்பில்
வர்ணங்களில் விழுந்தன விழிகள்.
ஓசைகளின் சிலிர்ப்பில்
வர்ணங்களை வழித்தேன்...
உதிர்ந்தன வர்ணங்களெல்லாம்
கருமையாய் ஈரமற்று.


18112001

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அணையும் நிழல்



-ந.மயூரரூபன்

ஒற்றைக் கிரீச்சிடலால்
காற்றின் மௌனத்துயில்
அதிர்ந்து கலைகிறது.
இராக்குருவியின் இந்த ஞாபகம்
அடிக்கடி நினைவுள் மீள்கிறது.

சுடராய் எரிந்தும் 
சுடர்களாய்ப் பிணைந்தும்
சூரியனின் கிழக்கைத் தொடரப் பிறந்தவன்  
பொந்தில் அடைந்து புகைந்தவியும் 
அக்கினிக் குஞ்சாயானேன்.

தாலாட்டில் வளரும் துயிலாய் 
தன் கனவைத் திரட்டி
எனக்காய் நினைந்து
உயிர்பொசியும் அம்மா…

அவள் நினைவு
காற்றில் படிந்திறங்கும் 
விம்மலற்ற தாலாட்டாய் 
என்றும் எனக்குள் இருக்கட்டும். 
அவளுள் என் நினைவு
விளக்குச் சுடரில் துடிக்கும்
நிழலாய் மட்டுமே இருக்கட்டும்.

ஒற்றைக் கிரீச்சிடல் நிற்காமல்
மீண்டும் நீழுகிறது அவலமாய்...
இன்றும் வருகிறது
இராக்குருவியின் அந்த ஞாபகம்.

இருள் சூழ்ந்த பொழுதுகள் 
கரையும் நியதியற்று
நீழுகிறது முடிவற்றதாய்.

23042001

சனி, 17 ஏப்ரல், 2010

தனிமை

-ந.மயூரரூபன்


முறைக்கிறதா என்னைப் பார்த்து
சிரிக்கிறதா என்னைப்பார்த்து
ஒன்றுமே புரியவில்லை
அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்
பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே
விரோதமாய்ப் பார்க்கின்றன
என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்
ஒட்டியிருப்பது பயந்தானோ?
பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?
என்னுள் துடிப்பு ஏறிக்
குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்
கனவுகள் நெருக்குகின்றன.
கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்
அருட்டிப்பார்க்கிறது என்னை.
ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்
உடல் வறட்டக் கத்தும் சத்தமும்
மூச்சழிக்க வைக்கும் என்னை.
கொப்பில் குதிக்கும் தாட்டானும்
தேடித் திரிவது என்னைத்தான்.
ஊத்தை இளிப்புடன்
ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்
உயிர் கொழுவித் தவிக்கும்.
நான் போகுமிடமெல்லாம்
நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.
காகமும் தாட்டானும் கூடத்தான்.
அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்
நான் மட்டும் தனியே.


08042001

காலமும் நானும்

-ந.மயூரரூபன்

நான் பார்த்த மரங்களெல்லாம்
நன்றாய் வளர்ந்துவிட்டன.
இலைகள் மஞ்சளடித்து...
இறந்து... மீண்டும் மீண்டும்
பச்சைகளாய்த் துளிர்த்தும் விட்டன.
துளிர்க்கவும் தொடங்குகின்றன.
காலம் கடந்து செல்கிறது...
நான் மட்டும் அப்படியே னெ; நினைவுகளுடன்.

தூரத்தேகேட்டு
என்னைத் தேடிக் கசிந்துவரும்
சங்கொலியில் என் காலடிகள் மிதந்து
மண்ணொழுங்கையில் ஏறிச்செல்கின்றன.
முழுக்கைச் சட்டைகள் சினமூட்டும்
மார்கழிக் குளிரில் அதிகாலைக்கு முன்னே
விழித்துவிட்ட களிப்புடன்
எம் நடையோடசைந்து லாம்பும் எம்முன்னே
தொடர்ந்து வரும்.
வைரவர் கோயில் வாசலில்
திருப்பாவைப் பாட்டும்
ஒழுங்கை நாய்களின் குரைப்பும்
சங்குடன் ஓடிக்கலக்கும்.
காலைகள் இப்படிக் கலைய
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

மணலொழுங்கை கடந்து
மதகேறி மிதக்க வரும் எனது பள்ளியும்
குச்சொழுங்கை முழுதும் குவிந்து கிடக்கும்
எனது காலடிகளும்
மீண்டும் மீண்டும் கனவாய்ப் படிகின்றன.
நீண்ட பொழுதுகள் என் நடைபோல் கழிகின்றன.
முழுதாய் என்னைத் தன்னுள்ளே நிறைத்து
மூச்சுக்களால் நிறைந்து
மகிழ்வால் முட்டிய எங்கள் வீடு...
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

நம்பிக்கையூட்டும் பொழுதுகளைக் காவிக்
காலம் நடந்து செல்கிறது.
மரங்களின் பருவமாற்றம்
என்னிலும் படர்ந்து செல்கிறது.
மணலொழுங்கையின் தவிப்பு
தன்மூச்சினை என்மீது
எறிந்துகொண்டேயிருக்கிறது.
இப்போது காலம் கடந்து செல்கிறது...
என்னைத் தனியே விட்டு.


13012001

திங்கள், 12 ஏப்ரல், 2010

உயிர்ப்பின் ஒலி

-ந.மயூரரூபன்


வாழ்வின் ஆழத்தை வியக்கும் ரேகைத்தனமாய்
எம்முகவரிகள் வேர் நிறைத்தன.
வாழ்வின் பதிவுகளுடன்
எண்ண அடுக்குகளில் மாட்டிக்கொண்டு
உசாவும் உறவுக்கிளையாய்
சாவரை தழைக்கும் மண்ணின் நினைப்பு.

மண்ணின் நினைப்பு
சொந்தங்களைச் சுமந்ததால்
சுகித்திருந்தது பூரிப்பாய்.
முலையூறி விம்மும் தாய்மையாய்,
மூண்ட நினைவுகளுடன் முட்டிக்கொண்டு
பாசங்களைச் சுமக்கும்
பிஞ்சுகளாய் நாமன்று
தளர்நடையிட்ட தாய்மேனி.

தாய்மேனியின் உயிர்நாடி
ஓடுமுடல் எங்களது
புதையும் மணலில் பாவித்திரிந்த பாதங்களுடன்
கதைபேசிக் காத்திருந்த கரைவெளி
எல்லாம் எங்களது.

எங்களது சுரண்டப்படும் நினைவுகளால்
துன்பங்களாய்க் கரைந்தன பொழுதுகள்.

ஆசை பொதிந்த மண்ணுக்காய்,
உயிர்ப்பைப் பொழியும் வெளிக்காய்
ஆவிகலந்து உப்புக்காற்றுடன்
அசையும் எம்முயிர்க் கணுக்களின் கனவிது.

கனவி; வெளிகள் திரையின்றித் தூலமாய்...
விரியும் பொழுதுகள் நம்மண்ணிலும் படிந்தன.

முழங்கிய சங்கநாதத்தின் ஒலி
முடியாமல் அலையாய் நீண்டிங்கு
வெம்பித்தகித்த வெளியெங்கும்
உயிர்ப்பாய் ஒலித்தது.

மீண்டும்
புதையும் மணலில் பாவித்திரியும் பாதங்களுடன்
கதைபேசிக் களித்திருப்போம்.


நிலம் இதழ்-3 (2001)

புதன், 7 ஏப்ரல், 2010

பார்த்தவர் யாருமில்லை

-ந.மயூரரூபன்



வாய்ப்புப் பார்த்திருக்கும் தெருவில்
எனது காலடிகளைத்தேடி
ஓர் நினைப்பு இறங்கியலைகிறது
என்னைத் தவிர்த்து.

விழிகள் மயங்கும்
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்
நினைவைக் களைந்து
திகைத்திருக்கும் எனக்குள்
நுழைந்து சுருண்டுகொள்கிறது
என் நினைவு தின்ற அத்தெரு.

நான் நடந்தலையும் வெளியில்
மெதுவாய்த் தெரு
சரிந்திறங்கியதை
கண்டவர்கள் யாருமில்லை....

வெளியெங்கும்
பழமையின் வீச்சமாய்
என் கனவுகள் மட்டும்
படிந்திருப்பதைக் கண்டதாய்ப்
பேசிக்கொண்டார்கள் எல்லோரும்.

07042010

திங்கள், 5 ஏப்ரல், 2010

மிதப்பு


-ந.மயூரரூபன்


அது ஆனந்த சயனம்
அண்டசராசரமும்
கனவுகளின் மிதப்பில்
கரைந்துகொண்டிருக்கும்

கவலைகள் தேடிவருவதும்
காலங்கள் துரத்துவதும்
கண்களின் இமைகளில்
தடைப்பட்டுவிடும்

இமையிறுக்கிப் பால்குடிக்கும்
பூனைக்கெங்கே தெரியும்,
வானத்தின் முகடெங்கும்
விழிகள் முளைத்திருப்பது?