வியாழன், 31 மார்ச், 2011

மூச்சுக்கயிறு


-ந.மயூரரூபன்

மூச்சை மூடிக்கட்டும் நொடிகளில்
நான் தொங்குகிறேன்...
இறுகும் கயிற்றிலிருந்து
என் வாசனையுடன் துடிக்கும் நொடிகளின்
ஏக்கம் சிந்துகிறது.
வலிநிறை தொட்டியாய்
என்னுடலின் தளம்பலில்
ஆயிரமாயிரம் கால்கள் முளைத்த பூச்சியாய் 
செத்துப்போகிறதென் சுரணை.


எல்லையொட்டிய இரவும் பகலும்
என் மூச்சுத் தங்கும் வெட்டையில்
துயிலத்தொடங்கிய பொழுதொன்றில்
உங்கள் நினைவுகளில் அழிந்துபோனது
என் வெட்டை.
என்னிலிருந்து ஒழுகும்
ஏக்க நொடிகளின் வாசனை
நீங்களொட்டிய எல்லைமுள்ளில்
தொங்கியாடுகிறது.

என்வெட்டையில் களவுபோன மூச்சுக்கள்
ஒட்டிப்புனைந்த இரவுகளில்
வளையக் கயிறுகளாய் தொங்குகின்றன.
சிந்திய நொடிகளில் மூழ்குமென்னை
வளைத்துக்கொள்கிறது மூச்சுக்கயிறு.

எல்லைப்புனைவற்ற வார்தைகள்
என்னுடலைக் காவிச் செல்கின்றன.

310320112250

ஞாயிறு, 27 மார்ச், 2011

கூப்பிடு தொலைவில் அலையும் அழுகை

-ந.மயூரரூபன்

கூப்பிடு தொலைவுகளில்
கந்தையாய்த் தொங்கவிடப்படும்
தன்னழுகைகளைச்
சேர்த்து வைத்துப்படுத்திருக்கிறது
காயம்பட்ட அவளுடல்.

குழந்தைகள் படுத்திருக்கும்
கனவுப்பாலை வெளியிலிருந்து
அவள் இழுக்கப்படும் பொழுதுகளிலெல்லாம்
தொங்கு்ம் அழுகைகளின் சலனம்
இந்த வெளியில் மெல்ல ஊர்கிறது.

அவளுடலின் மேலாக
நாக்கைத் தொங்கவிடும் நாய்களின்
நிழல் உதைந்தேறுகிறது.
ஆன்மாவின் மொக்குள்
அவளுக்கான இருள்வட்டம் காணுகிறது.

ஒளிவட்டமில்லா
பாழ்வெளி மக்களலையும்
எங்கள் நிலங்களில்
பெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன.

270320111850

செவ்வாய், 15 மார்ச், 2011

நீளும் கனவுப்பாலை

-ந.மயூரரூபன்

வெறுங்காற்றுக்குள்
தீயடர்ந்திருப்பதாய்
என்குழந்தைகளுக்கு கனவுகள்
படர்ந்ததேயில்லை.
தீயவியும் நீருக்குள்
திரண்டிருக்கும் சுவாலைகளின்
பதுங்குகுழிகளும் இவர்களின்
பாதங்களுக்குள் கூர்முனை மறைத்தே
தூங்கிக் கொள்கின்றன.

வீட்டுள் குழந்தைகளின் கனவுகள்
நிறைந்துகொள்கின்றன.
ஆசையில் பொளியும் கனவுகள்
காற்றின் கட்குழிக்குள் உப்பிக்கொள்வதை
பார்க்க வேண்டுமெனும் அங்கலாய்ப்பே
அவர்களுள் ஈயாய் மொய்க்கிறது.

குழந்தைகளின் கனவுகளெரி வாசம்
உங்கள் கட்குழிக்குள்
ஒளிந்தே போகின்றன.
எரிக்கும் வெறுங்காற்று
குழந்தைகளின் தலைவருடும்
மெய்க்கணத்துள் ஏறிக்கொள்கிறது.

சுவாலைகள் தின்ற கண்ணீர்
கனவுகளற்ற குழந்தைகளின்
வெளிகளை கருமையாய் நிறைக்கிறது.

ஈய்க்கள் மொய்க்கும் கனவுப்பாலையில்
குழந்தைகள் தூங்குகின்றன. 


150320112140

செவ்வாய், 8 மார்ச், 2011

தீ வரையும் நீ

-ந.மயூரரூபன் 

தீக்கங்குகள் அடருமாசை
நீருக்குள்ளும் சூடாய்த் தழுவுகிறது.
நான் மூழ்கிய வெளியில்
தீயினீரமே மணக்கிறது.
காற்றறும் பொழுதுக்காய்
காத்திருக்கும் கணமொன்றில்
தீயில் மிதக்கும் என்னை எழுதுகிறேன்.
ஒவ்வொரு எழுத்துக்களும்
காற்றள்ளிச் செல்லும்
கிடங்குள் குவிந்து
கருமையுள் கரைந்து போகின்றன.
நீ கவர்ந்த
தீ தோய்ந்த என்னெழுத்துக்களை
உன்னுள் பத்திரப்படுத்து - அது
உன்னை வரையும் துயரங்கள்.
காற்றுக்கொளிந்த உன்னினைவுகளே
நான் நனைந்தெரியும் வெளியில் மிதக்கின்றன.

080320112305

திங்கள், 7 மார்ச், 2011

இருள் வாசனை நகரம்

-ந.மயூரரூபன் 

எனது நகரத்தின் தெருக்களில்
நான் நடக்கும் சுவடுகள்
வெந்துபோகின்றன.
எனது நிழல்கள் புகைந்து
தடமழித்துச் செல்லும்
வரைபடங்களையே கீறுகின்றன.

நரகத்தின் இருள்மூடி
ஒவ்வொரு யௌவனங்களிலும்
உடைக்கப்படுகின்றன.
நகரத்தைப்புணரும் பெருங்குறியொன்று
வண்ணங்களைத் தின்பதற்காய்
வாசனை சொட்டி
சாலை வெயலில் படுத்திருக்கிறது.

சுவடு மறந்துவரும் நீங்கள்
வாசனை கசியும் இருளில்
கரைந்து போகிறீர்கள்.
வரைபடத்துள் உருக்கொள்ளும் உங்களை
நகரம் விழுங்கிக் கொள்கிறது.

எனது சுவடுகள்
நகரத்து வரைபடத்துள்
ஒளிந்துகொண்டதாய்
என்னையும் அழைக்கிறீர்கள்.
புகையும் நிழல்களின் நிணவாசத்தில்
நகரத்தின் தெருக்களில்
உயிரற்று நானும் நடக்கிறேன்.

070320112225

வியாழன், 3 மார்ச், 2011

எங்கள் கதவு

-ந.மயூரரூபன்

மறைவு தருமந்தக் கதவு
பழையதாய்ப் போனது.
பழுமரத்தின் மறைவில்
சகலமுமொடுங்கிய உந்நிழலில்
தோயும் கணங்களை நிறைத்தே
களைத்துப்போனது.

மறைப்பின் கதவுகளையே
என்னால் கண்ணிறை தின்றும்
அடையமுடிகிறது.

மூடமுடியா வெளியது
என் கனவைத்துரத்தி
செத்துப்போகிறது.
கனவின் கொய்ததலை மட்டும்
கதவை அடிக்கடி முட்டுகிறது.

இருள் முளைக்கும் வெளிக்குள்
என் கனவைத்தேட
கதவைத் திறக்கிறேன்...
வெளியிலிருந்து அதை மூடுகிறாய் நீ.

களைப்பற்று இருவரும் காத்திருக்கிறோம்
கதவில் எங்கள் முகங்களைப் பொருத்தியபடி.
.

030320112200