புதன், 29 செப்டம்பர், 2010

எங்கள் வாழ்வு






-ந.மயூரரூபன்




மரணப் பொறிகள்
கடலோரம் படுத்திருக்க
சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகப்போன கணத்தில்
உயிர் சிந்தச் சிந்த
விழுந்து போனோம்.

உறவுகள் இறைந்துபோன
எம்நிலத்தில்
 நிலக்கண்ணிப் பொறிகளும்
ஊனுறுஞ்சும் கங்குல்களும்
தம் பொழுதுகளை
விழுத்தியிருக்க
மீண்டு்ம் எழுந்துகொள்கிறோம்...
வியக்காதிருங்கள் சோதரரே!




29092010

சனி, 11 செப்டம்பர், 2010

..................................


-ந.மயூரரூபன்



என்னை மூடிச்
சேர்ந்துபோன இலைகளெல்லாம்
உயிர் வரண்டுபோய்
என்மீது மோதுகின்றன.

உன்னினைவில் நனைந்து
வரளாதிருக்கும் என்னுயிர்
அந்தச் சருகுகளுடன்
இன்றும் உன்னைப்பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறேன்.

மகனே!
காயா நினைப்பெல்லாம்
உன்னால் அலைவுறும்
காற்றுக்குத் தெரியுமென
காத்திருக்கிறேன்.

மூவாறு மாதங்கள்
உன்மூச்சு உலவுமிடமறியாது
சித்தமழிந்து
கிழி சீலையானேன்.

என் கொள்ளிக்குடமுடைப்பான்
என்மகன்.
உயிர் வேகுந்தீ
மூண்டுவிட்டதடா.
நான் பேசிக்கொள்ளும்
சருகுகளெல்லாம்
சிந்தையுறைந்து
எரிகின்றன.

உயிர்மூட்டிய நெருப்பில்
உனக்காய்ச் சுருண்டிருக்கிறேன்
மகனே...


11092010

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இக்குழந்தை


-ந.மயூரரூபன்



நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது.

ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன்வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடார மண்ணுள் விழுகின்றன.

குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின்
எச்சம் மட்டுமே முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.

பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.

தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்துபோகிறது.

தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்தழுகிறது குழந்தை...
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.


07092010

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வலி

-ந.மயூரரூபன்


ஓடிக்கொண்டிருக்கும்
காற்றின் கருக்குகளில்
குந்தியிருக்கிறதுன் மனது.

 

குஞ்சுறை விழுத்திய

கிளைமையற்ற

முள்மறை முக்காடு
மூடித்தங்குகிறதுன்
சைனியத்துள்.

அறுந்துவிழுமொவ்வொரு
சினைகளிலுந் தொங்கி

அந்தரிக்கிறேன் நான்.



24052010