புதன், 27 ஜூலை, 2011

பச்சோந்தி மனசு

-ந.மயூரரூபன்

சுற்றிச் சுற்றிக் கத்தும்
பூனைக்குரலின் அசை
மீன் வாசனையற்ற அந்த வெளியில்
வெறுமனே காய்ந்து போகிறது.

ஈரத்தினிடுக்குகள்
ஓடிப்போன சுவடுகளில்
குருதிப்பொட்டுக்கள் மட்டும்
உலர் நிலையழிந்து
அலைவுறுகின்றன.

உடைந்துபோன அம்முட்கள்
வெறுமையின் மடியில் சிதறுகின்றன.

முள் விழுங்கியபின் மனது
மண்டூகமாய் நிறம் மாறுகிறது.
பொழுதுகளின் வெறுமைக் குவியலில்
முக்குளிக்கிறது மிகச் சாதாரணமாய்.

மோட்சம்
இங்கும் மூடப்பட்டிருக்கிறது.

270720111515

வியாழன், 7 ஜூலை, 2011

நீருலகின் நஞ்சு

-ந.மயூரரூபன்

திரவமது தரும் மயக்கம்
நீர்த்துப் போனதாய்
மூலையில் கொட்டப்படுகிறது.
மயக்கப் பொதியாய் வரும்
உணர்வுச் சலனங்கள்
குருணிக் கற்களாய்
வார்த்தைகளின் கரையில்
தட்டுப்படுகின்றன.

அலைகள் செத்த
கடலின் தோணியாய்
உன்னிலெனது காமம்
தனித்தே மிதக்கிறது.
ஆழக்கடலின் அமானுஷ்யத்தில்
விழுந்து போகிறதென் சலனச் சுழிகள்.

இருள் கொத்திய நீருலகில்
மிதக்கிறது என்னுடல்.
காயமீர்த்த கற்கள்
ஒன்றொன்றாய் உதிர்கின்றன.

070720111620

சனி, 2 ஜூலை, 2011

பச்சை வார்த்தைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

-ந.மயூரரூபன்

மகரந்தத்துள் மூழ்கும்
சந்திப்பொன்றில் எறிந்தேனென்னை.
அசையும் காலத்தைப் புசித்தபின்
அசையாக் காலத்துள்
காய்ந்து முளை செத்த வெட்டையின்
ஒவ்வொரு மூலைகளிலும் தொங்குகிறேன்.

என்னைப் பொறுக்கித்
தன்னைப் புனையும் வார்த்தைகள்
என்னைச் சுற்றிப் பறக்கின்றன.
பச்சையிலைகளாய் நிறைய
இறகு முளைக்கும் புழுக்கள்
பச்சை வார்த்தைகளைத் தின்னுகின்றன.

எஞ்சிய காலத்தின் ஓட்டைகளில்
தொங்கும் என் மீது
வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன.
சூடு முளைக்குமிந்த வெட்டையில்
பறத்தல் மறந்து
வண்ணச் சிறகுகள் விழுகின்றன.

020720111450