செவ்வாய், 12 அக்டோபர், 2010

புலன்


-ந.மயூரரூபன்



வயிற்றால் ஊர மனமின்றி
நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு.
வீங்கிய வயிற்றுள்
செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய
 பொறிகளைந்தும்
பதனமழியக் கிடக்கிறது.

தனிமை நெடுத்துப்
புலம்பியழும் புலன்களினோடை
மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது.
பறவைகளிறங்காப் புதர்கள்
என் புலன்மூடிப் புனையும் பொழுதொன்றிலும்
அது தன்வழியிடை
இறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஓடை நனைக்கும் காற்று
என் புலன்குடித்து மயங்க
பதனமழிந்த என்பொறிகளைக் கக்கிய பாம்பு
ஓடை வழிதேடி ஊர்கிறது.


12102010

வெள்ளி, 8 அக்டோபர், 2010

இருள் மரம்


-ந.மயூரரூபன்



களைத்து விழுந்திருக்கும்
வெளிச்சத்தினலைவுகள்
கோழையாய்த் தீய்ந்து போகிறதிங்கு.

சித்திரங் கரிந்த நிலத்துள்
தீக்குணந் தின்னும்
கருங்காட்டு வெளியில்
சஞ்சலமறுந்துபோய்ப் படுத்திருக்கிறேன்.

என்னுடல் தின்னுங்குறி
கருங்காட்டு இருள் சப்புகிறது.
அது துப்பிய வெளியில்
அச்சம்பெருக்கும் இருள்மரம்
வளர்ந்தோங்குகிறது.

உயிருரிந்த பின்னும்
இச்சையுறிஞ்சும் உன்குறியால்
களைத்து விழுந்த
வெளிச்சத்தினுடல் புணரப் புணர
விழுந்து கொண்டேயிருக்கிறது இருள்.

08102010

உண்மை



-ந.மயூரரூபன்



காலம் உந்நிழல் மீது மிதித்தபோது
நீயெறிந்த அக்கல்
குளத்தில் வீழ்கிறது ஆழ.
வழுவழுப்பற்ற அந்தக்கல்
என் பொழுதைக்
காயப்படுத்திச் செல்கிறது.

கல்லால் முளைக்கும்
நீர்வளையங்கள்
கல்லைப்பற்ற நீளும்
என்கரங்களை ஒதுக்கித் தள்ளுகின்றன.

குளிரற்றும் கூரற்றும்
அசையும் வளையங்கள்
பொசுங்கிப் போகின்றன
என்னுணர்வுகளில்...
கல்லைப் பற்றித் தொடர்கிறேன்.

மெய்யுறைந்து பாரமேறிய கல்
கீழே வீழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

பற்றிய பின்னாய்
விளைந்துகொள்கிறது
கல்லின் பாரம் எனக்குள்ளும்.
மெய்யுடன் விழுந்துகொண்டேயிருக்கிறேன்
இருள் சறுக்கும் ஆழத்துள்.


08102010