செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சாத்தானின் ஒரே பழம்

-ந.மயூரரூபன்

கை படாத காற்று அது.
பார்வை விழாத நிலத்தில்
படரும் ஒழுங்கே
அதனுச்சியில் அறையப்பட்டது.

மாறுங் காலத்தின்
இருக்கையின் துகள்கள்
ஒளிந்து கொள்வதற்காய்
அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன.

புதைவழியை
வரைந்து கொடுக்கும் பெருமரம்
காற்றின் குலக்குறியமது.

நுனி தெரியாக்
காலத் தொழுகையால்
மயங்கும் காற்றை
கனவுகளால் மிதிக்கும்
ஒற்றைப்பழ மரமது.

நுளை பாவங்களால்
அறுந்து விழும் பழம்
காற்றின் மடியில் மறைகிறது.

அடர் கரங்களுக்குள்
ஆர்ப்பரித்தோடுகிறது காற்று.
எங்கும் கொட்டுகின்றன
அதே புதைதுகள்கள்.

090820111505

புதன், 27 ஜூலை, 2011

பச்சோந்தி மனசு

-ந.மயூரரூபன்

சுற்றிச் சுற்றிக் கத்தும்
பூனைக்குரலின் அசை
மீன் வாசனையற்ற அந்த வெளியில்
வெறுமனே காய்ந்து போகிறது.

ஈரத்தினிடுக்குகள்
ஓடிப்போன சுவடுகளில்
குருதிப்பொட்டுக்கள் மட்டும்
உலர் நிலையழிந்து
அலைவுறுகின்றன.

உடைந்துபோன அம்முட்கள்
வெறுமையின் மடியில் சிதறுகின்றன.

முள் விழுங்கியபின் மனது
மண்டூகமாய் நிறம் மாறுகிறது.
பொழுதுகளின் வெறுமைக் குவியலில்
முக்குளிக்கிறது மிகச் சாதாரணமாய்.

மோட்சம்
இங்கும் மூடப்பட்டிருக்கிறது.

270720111515

வியாழன், 7 ஜூலை, 2011

நீருலகின் நஞ்சு

-ந.மயூரரூபன்

திரவமது தரும் மயக்கம்
நீர்த்துப் போனதாய்
மூலையில் கொட்டப்படுகிறது.
மயக்கப் பொதியாய் வரும்
உணர்வுச் சலனங்கள்
குருணிக் கற்களாய்
வார்த்தைகளின் கரையில்
தட்டுப்படுகின்றன.

அலைகள் செத்த
கடலின் தோணியாய்
உன்னிலெனது காமம்
தனித்தே மிதக்கிறது.
ஆழக்கடலின் அமானுஷ்யத்தில்
விழுந்து போகிறதென் சலனச் சுழிகள்.

இருள் கொத்திய நீருலகில்
மிதக்கிறது என்னுடல்.
காயமீர்த்த கற்கள்
ஒன்றொன்றாய் உதிர்கின்றன.

070720111620

சனி, 2 ஜூலை, 2011

பச்சை வார்த்தைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

-ந.மயூரரூபன்

மகரந்தத்துள் மூழ்கும்
சந்திப்பொன்றில் எறிந்தேனென்னை.
அசையும் காலத்தைப் புசித்தபின்
அசையாக் காலத்துள்
காய்ந்து முளை செத்த வெட்டையின்
ஒவ்வொரு மூலைகளிலும் தொங்குகிறேன்.

என்னைப் பொறுக்கித்
தன்னைப் புனையும் வார்த்தைகள்
என்னைச் சுற்றிப் பறக்கின்றன.
பச்சையிலைகளாய் நிறைய
இறகு முளைக்கும் புழுக்கள்
பச்சை வார்த்தைகளைத் தின்னுகின்றன.

எஞ்சிய காலத்தின் ஓட்டைகளில்
தொங்கும் என் மீது
வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன.
சூடு முளைக்குமிந்த வெட்டையில்
பறத்தல் மறந்து
வண்ணச் சிறகுகள் விழுகின்றன.

020720111450

திங்கள், 27 ஜூன், 2011

கசங்கும் காலம்

-ந.மயூரரூபன்

எங்கள் நடைச் சேற்றில்
சாத்தான் விதைகளின் முளை.
உழக்கும் கால்களைத் தடவி அது
அங்கக் கொடியாய்ப் படரும்.
நிலத்தின் படுக்கைகள்
ஒவ்வொரு இராப்பொழுதிலும்
கசங்கிப் போகிறது.

அந்தரங்கத் துணையொன்று
இரகசியங்களில்
பறந்தோடும் மின்மினிகளைப்
பிடித்தொட்டுகிறது.
மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால்
கரைந்து போகிறதெல்லாம்.

சாத்தானின் பொழுதுகளில்
ஒளிப்பேதம் எங்கே?
ஆச்சரியங்கள் மயங்கிய
சாதாரண நாளொன்றில்
நிரந்தரமாயிற்று நிர்வாணம்.

நிலத்தைப் புணருமுடல்களின் கீழ்
கசங்கிப் போகிறது காலம்.

250620111550

வெள்ளி, 10 ஜூன், 2011

காளான் முளைத்த வெளி

-ந.மயூரரூபன்

என்னைத் தொலைத்துத் திரியும்
அந்தக் காற்று
வெளிச்சம்  பூசிய தன்பொழுதுகளை
மறந்தே போனது.

நான் கலைந்தபின்
தான் மிதக்கும் வெளிகளை
கீறிக் கீறி
இரவின் நார்களையுரித்து
ஒளிந்து கொள்வதற்கான
மாயையொன்றை வரைந்து கொள்கிறது.

நீலக் காளான்முளைத்த வெளிகளில்
எனது இலட்சம் புள்ளிகளும்
கோடிகளாயுடைந்து போயின.
காற்றிலொழுகிய
மூச்சில் அள்ளுண்டுபோகும் நான்
பலவாய்
மிகப்பலவாய்
அந்தக் காளான் வெளிகளில்
புதைந்து கொண்டிருக்கிறேன்.

100620112030

திங்கள், 30 மே, 2011

அர்த்தம் தொலையும் வாழ்வு

-ந.மயூரரூபன்

நிறங்களற்ற காற்றினுடற் குவியலில்
முகம் புதைய
தன்னசைவு மறைக்கும் பறவையொன்று
இழையொன்றைப் பின்னுகிறது.

காற்று இறந்துவிழும் இடத்தில்
அந்தப்பறவை படுத்திருக்கிறது.

காற்றின் வந்துவிழும்
ஏதுமற்ற நெடுத்த வெளிகளையும்
தூக்கந் தொலையும் குகைக்குள்
இழுத்துக் கொள்கிறது.

எதுவுமேயற்றதென நினைக்குமுன் கணங்கள்
காலமுரிந்துபோன
பாம்புச் செட்டையாகிறது.
பாம்பாய்த் துரத்தும் காலத்தை
எதுவுமேயற்ற நிர்வாண வெளிகளால்
காயப்படுத்துகிறாய்.
அந்தக்குகையின் கற்கள்
உனது நிர்வாணத்தையும் மூடிக்கொள்கிறது.

இருள் கொட்டும் விழிகள்
காற்றிறந்து விழும் குகையின்
வாசலில் மறையாதிருக்கும்.
அர்த்தமற்ற கணங்களில்
தன்னசைவு மறைக்கும்
இழைகளைப் பின்னும் பறவை
உன்னையே பார்த்திருக்கிறது.

விழி விறைத்துத் தொங்குமுன் உடலில்
ஏதுமற்றதென்னும் பாம்புச் செட்டை பிணைந்திருக்கிறது.

300520111605

செவ்வாய், 17 மே, 2011

ஏதுமற்றுக் கரைதல்

-ந.மயூரரூபன்

நான் நடக்கின்ற பாதை
எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால்
கிழிபட்டிருந்தது.
ஒவ்வொரு காயக்கிடங்கிலும்
செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை
விழுங்கிய எறும்புகள்
பரபரத்தோடி விழுகின்றன.

பாதையின் முடிவற்ற வரிகளை
ஒவ்வொருவரிடமும் காவியபடி
ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள்.

உலரமுடியா அழுகையினீரம்
இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது.
ஓலச்சுவர்களின் வெறுமையில்
நாக்கறுந்த பல்லியொன்றினசைவு
எதுவுமற்றுக் கரைந்துபோகிறது.

நினைவுப்பாலையாகிவிட்ட
இந்த நிலத்திலிருந்து
காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த
என்னைப்பார்க்கிறேன்.
இருட்கட்டைகளினீரம் எங்கும்டர
ஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.

170520112340

ஞாயிறு, 1 மே, 2011

குதிரைகள் இறங்கும் குளம்


-ந.மயூரரூபன்

வார்தைகள் நிலையழிந்து
முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின்
கரைகளில் காட்டுக்குதிரையொன்று
திமிர்த்து நடைபயில்கிறது.
கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய்
நிரம்ப முடியாக்குளம்
கருநிழல் சாய்ந்த அக்குதிரையின்
கனைப்பொலி நிறைத்து
இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது.

உன்நினைவுகள் முளைத்தவெளியை
மேய்ந்த தொன்மைக்குதிரையது.
தொன்னீராய் ஊழ் தொழியும்
என்குளத்தில் தீராத்தாகம் முடிக்க
தன்கனைப்புகள் வரையும் பாதையில்
ஏறி வருகிறது.

இச்சைகளுடைபடு கணங்கள்
வண்ணச்சேறாய் காட்சித்திரையில்
வழிந்துறைகிறது.
நிரம்பமுடியாக்குளத்தின் கரைவெளியெங்கும்
வண்ணங்குளைந்த கனைப்பொலிகளின் பாதை
திசைகளுடைபடத் திறந்துகொள்கின்றன.

நிற இலைகளடர்ந்த செடியொன்று
கரையில் முளைத்தபோது
காட்டுக்குதிரைகள் கணக்கற்று
என்குளத்தில் இறங்கிக்கொண்டிருந்தன.

010520112055

வியாழன், 28 ஏப்ரல், 2011

கருவனக் குழி




-ந.மயூரரூபன்

நிறங்கருத்த குழிக்குள்
உங்கள் தலைகள் ஒளிந்திருக்க
குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில்
மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள்.
ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால்
கருவனம் ஒன்று மிதக்க
தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன.

கருவனக்குழிகள் நிறையும் பாதையே
என்கால்களின் கீழ் திறந்துகொள்கிறது.
மேலிமை மடல்களில்
தீவட்டியேதுமற்ற நீற்றுப்படுகையின்
துக்கவயிற்றுப்பாரம் ஏறிக்கொள்கிறது.

இருகைகளிலும்
குழந்தைகள் தொங்கிக்கொள்கிறார்கள்.
அந்தரத்திலாடும் கால்களை
கருவனத்தின் நாக்குகள் தீணடப்பாய்கின்றன.
காற்றெரிய குழந்தைகள் அலறுகின்றன.
அலறலின் வெந்த மணத்தில்
எனதுடல் மேலிமை நீற்றுப்படுகையில்
தலைசரியக் கவிழ்ந்துபோகிறது.

கருவனத்தின் இலைக்கடலில்
குழந்தைகள் தத்தளித்தபோது
எனது தலை
உங்கள் குழிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறது.

280420111540

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சூரியசாட்சி


-ந.மயூரரூபன்


சூரியனின் கீழாக
எனது நிழற்கீறல்களை
உரித்துச்சுருட்டுகின்ற 
வியர்வைப் பொழுதுகளில்
என்னை விலக்கி நடந்தன
என் கால்கள்.


சலனம் வற்றிய
நிழற்சுருளுடன் தொற்றியிருக்கும்
வெறுங்கிடங்காய் என்னுடல்
ஒற்றைக் காகமொன்று
வெறித்திருக்கக் காய்ந்துபோகிறது.


உணர்வுகளிலூறிய கால்கள்
கருநாகம் கொத்திய 
இரவுகளிலேறிச் செல்கிறது.
நஞ்சடரும் இருள் மிதித்து
என்வீட்டு முனைகளில்
நோக்கற்று அமர்ந்தழுகிறது.


பறையொலி கொட்டுண்டோடும்
நிலத்துவழியில் போகுமென் கால்கள்
அதிருமோலங்களோடு அடைந்திருக்கிறது.
தலையறுந்த மரங்களைச் சுற்றி
எரிகனவுகளின் சாம்பல் படிந்துகொண்டேயிருக்கிறது.


மொட்டைமரத்தில்
என்கால்கள் தொங்கும் அலைபொழுதொன்றில்
சூரியனின்கீழ் முற்றுமுழுதாய்
நான் தொலைந்துபோனேன்.


190420112230


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வரிக்காடு

-ந.மயூரரூபன்

வானம் தனக்கான
நிறங்களைப் பெய்துகெண்டிருக்க
அந்தக்காடு அசைவற்று
அங்கேயே விரிந்திருக்கிறது.
வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள்
கறுத்தெரிந்த போதும்
நீறிச் சாம்பரானபோதும்
தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது
துடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு.
வானத்தின் புன்னகைகள்
கொட்டியபோதும்
அதனழுகைகள் அலைந்தபோதும்
காட்டின் உணர்கொம்புகள்
மறைந்தேயிருந்தன.
நீங்கள் வரைந்து கொழுவியது
எனக்கான காடு்.
வானமொடிந்த எனக்குள்
பெரும்பாறையாய்ப் படுத்தருக்கிறது
உருவற்ற அந்த வரிக்காடு.

170420112210

புதன், 6 ஏப்ரல், 2011

பேய்த்தேர் வீதி

-ந.மயூரரூபன்

வீதி வெயிலில்
காய்ந்து சுருண்டிருக்கும்
உலர்ந்தபின்னும் காற்றதன் மேல் 
தொங்கிக்கொண்டிருக்கும்.
பேய்த்தேர் ஆடியசையும்
சலனங்கள் மட்டும்
வீதியில் விழுந்துகொண்டிருக்க
இமை பொசுங்கிய கண்கள்
குலுங்கும் பையொன்று
மேற்குருட்டு வளைவில்
சோம்பியசையும்.
பேய்த்தேர் இழுத்துவரும்
ஒப்பனை வெள்ளமொன்று
வீடு தேடியிறங்குகிற உலர்பொழுதுகளில்
ஒவ்வொன்றாய் பைவிழிகள் விழும்.
ஊறிக்கலைந்த ஒப்பனையில்
காய்ந்தெரியும் காற்றறைய
பேய்த்தேரெழுதிய வாசல்கள்
சலனமற்று எங்கும் திறந்துகொள்ளும்.
புலனழிய ஓடும் தலையொன்று
விறைத்தலையும் வீதியில்
தன்விழி தொலைத்தோடும்.

060420112250


சனி, 2 ஏப்ரல், 2011

அம்மனை

-ந.மயூரரூபன்

நீரில் குளிக்கும் ஈரமாய்
எண்ணங்களை நனைக்கும் வார்த்தையை
அடிக்கடி அழைகிறேன்...
அம்மா!

காற்றில் நீயசைந்த கொடி
காய்தல் தொலைத்து
இன்னமும் என்னுரு வரைவதாய்
சடமொன்று கத்திப்போனது.

இன்னமும் தொற்றித்தொடரும்
உன்மடி புதையுமாசை
காற்றிலேறி திக்கற்றலைகிறது.

ஏழாய்ப்பிரித்த முட்டைப்பொரியலாய்
வார்த்தைகள் கூறுபட்டு
வரியடர்ந்த உன் முகத்தைச்சுற்றிச்
சுழன்றோடுகிறது மெய்ப்பொருள் தொலைத்து.
அம்மனை உன்பொருளே
நிறைகிறதெங்கும்.
பசியும் கவலையும்
என்னையணைக்க முடியாவெறுப்புடன்
உனக்குள் அடைந்துபோனது.
அவை உன்னுடல் தின்னுமிருளில்
தூங்கிப்போயின பொழுதுகளும்.

மெய்மையுடைபடும் கணங்கள் நிறைய நிறைய
என் வார்த்தைகள் தொலைந்துபோகின்றன.

020420111430

வியாழன், 31 மார்ச், 2011

மூச்சுக்கயிறு


-ந.மயூரரூபன்

மூச்சை மூடிக்கட்டும் நொடிகளில்
நான் தொங்குகிறேன்...
இறுகும் கயிற்றிலிருந்து
என் வாசனையுடன் துடிக்கும் நொடிகளின்
ஏக்கம் சிந்துகிறது.
வலிநிறை தொட்டியாய்
என்னுடலின் தளம்பலில்
ஆயிரமாயிரம் கால்கள் முளைத்த பூச்சியாய் 
செத்துப்போகிறதென் சுரணை.


எல்லையொட்டிய இரவும் பகலும்
என் மூச்சுத் தங்கும் வெட்டையில்
துயிலத்தொடங்கிய பொழுதொன்றில்
உங்கள் நினைவுகளில் அழிந்துபோனது
என் வெட்டை.
என்னிலிருந்து ஒழுகும்
ஏக்க நொடிகளின் வாசனை
நீங்களொட்டிய எல்லைமுள்ளில்
தொங்கியாடுகிறது.

என்வெட்டையில் களவுபோன மூச்சுக்கள்
ஒட்டிப்புனைந்த இரவுகளில்
வளையக் கயிறுகளாய் தொங்குகின்றன.
சிந்திய நொடிகளில் மூழ்குமென்னை
வளைத்துக்கொள்கிறது மூச்சுக்கயிறு.

எல்லைப்புனைவற்ற வார்தைகள்
என்னுடலைக் காவிச் செல்கின்றன.

310320112250

ஞாயிறு, 27 மார்ச், 2011

கூப்பிடு தொலைவில் அலையும் அழுகை

-ந.மயூரரூபன்

கூப்பிடு தொலைவுகளில்
கந்தையாய்த் தொங்கவிடப்படும்
தன்னழுகைகளைச்
சேர்த்து வைத்துப்படுத்திருக்கிறது
காயம்பட்ட அவளுடல்.

குழந்தைகள் படுத்திருக்கும்
கனவுப்பாலை வெளியிலிருந்து
அவள் இழுக்கப்படும் பொழுதுகளிலெல்லாம்
தொங்கு்ம் அழுகைகளின் சலனம்
இந்த வெளியில் மெல்ல ஊர்கிறது.

அவளுடலின் மேலாக
நாக்கைத் தொங்கவிடும் நாய்களின்
நிழல் உதைந்தேறுகிறது.
ஆன்மாவின் மொக்குள்
அவளுக்கான இருள்வட்டம் காணுகிறது.

ஒளிவட்டமில்லா
பாழ்வெளி மக்களலையும்
எங்கள் நிலங்களில்
பெண்களின் அழுகைகள்
கூப்பிடுதொலைவில்
அலைந்து தொங்குகின்றன....
தொங்கியலைகின்றன.

270320111850

செவ்வாய், 15 மார்ச், 2011

நீளும் கனவுப்பாலை

-ந.மயூரரூபன்

வெறுங்காற்றுக்குள்
தீயடர்ந்திருப்பதாய்
என்குழந்தைகளுக்கு கனவுகள்
படர்ந்ததேயில்லை.
தீயவியும் நீருக்குள்
திரண்டிருக்கும் சுவாலைகளின்
பதுங்குகுழிகளும் இவர்களின்
பாதங்களுக்குள் கூர்முனை மறைத்தே
தூங்கிக் கொள்கின்றன.

வீட்டுள் குழந்தைகளின் கனவுகள்
நிறைந்துகொள்கின்றன.
ஆசையில் பொளியும் கனவுகள்
காற்றின் கட்குழிக்குள் உப்பிக்கொள்வதை
பார்க்க வேண்டுமெனும் அங்கலாய்ப்பே
அவர்களுள் ஈயாய் மொய்க்கிறது.

குழந்தைகளின் கனவுகளெரி வாசம்
உங்கள் கட்குழிக்குள்
ஒளிந்தே போகின்றன.
எரிக்கும் வெறுங்காற்று
குழந்தைகளின் தலைவருடும்
மெய்க்கணத்துள் ஏறிக்கொள்கிறது.

சுவாலைகள் தின்ற கண்ணீர்
கனவுகளற்ற குழந்தைகளின்
வெளிகளை கருமையாய் நிறைக்கிறது.

ஈய்க்கள் மொய்க்கும் கனவுப்பாலையில்
குழந்தைகள் தூங்குகின்றன. 


150320112140

செவ்வாய், 8 மார்ச், 2011

தீ வரையும் நீ

-ந.மயூரரூபன் 

தீக்கங்குகள் அடருமாசை
நீருக்குள்ளும் சூடாய்த் தழுவுகிறது.
நான் மூழ்கிய வெளியில்
தீயினீரமே மணக்கிறது.
காற்றறும் பொழுதுக்காய்
காத்திருக்கும் கணமொன்றில்
தீயில் மிதக்கும் என்னை எழுதுகிறேன்.
ஒவ்வொரு எழுத்துக்களும்
காற்றள்ளிச் செல்லும்
கிடங்குள் குவிந்து
கருமையுள் கரைந்து போகின்றன.
நீ கவர்ந்த
தீ தோய்ந்த என்னெழுத்துக்களை
உன்னுள் பத்திரப்படுத்து - அது
உன்னை வரையும் துயரங்கள்.
காற்றுக்கொளிந்த உன்னினைவுகளே
நான் நனைந்தெரியும் வெளியில் மிதக்கின்றன.

080320112305

திங்கள், 7 மார்ச், 2011

இருள் வாசனை நகரம்

-ந.மயூரரூபன் 

எனது நகரத்தின் தெருக்களில்
நான் நடக்கும் சுவடுகள்
வெந்துபோகின்றன.
எனது நிழல்கள் புகைந்து
தடமழித்துச் செல்லும்
வரைபடங்களையே கீறுகின்றன.

நரகத்தின் இருள்மூடி
ஒவ்வொரு யௌவனங்களிலும்
உடைக்கப்படுகின்றன.
நகரத்தைப்புணரும் பெருங்குறியொன்று
வண்ணங்களைத் தின்பதற்காய்
வாசனை சொட்டி
சாலை வெயலில் படுத்திருக்கிறது.

சுவடு மறந்துவரும் நீங்கள்
வாசனை கசியும் இருளில்
கரைந்து போகிறீர்கள்.
வரைபடத்துள் உருக்கொள்ளும் உங்களை
நகரம் விழுங்கிக் கொள்கிறது.

எனது சுவடுகள்
நகரத்து வரைபடத்துள்
ஒளிந்துகொண்டதாய்
என்னையும் அழைக்கிறீர்கள்.
புகையும் நிழல்களின் நிணவாசத்தில்
நகரத்தின் தெருக்களில்
உயிரற்று நானும் நடக்கிறேன்.

070320112225

வியாழன், 3 மார்ச், 2011

எங்கள் கதவு

-ந.மயூரரூபன்

மறைவு தருமந்தக் கதவு
பழையதாய்ப் போனது.
பழுமரத்தின் மறைவில்
சகலமுமொடுங்கிய உந்நிழலில்
தோயும் கணங்களை நிறைத்தே
களைத்துப்போனது.

மறைப்பின் கதவுகளையே
என்னால் கண்ணிறை தின்றும்
அடையமுடிகிறது.

மூடமுடியா வெளியது
என் கனவைத்துரத்தி
செத்துப்போகிறது.
கனவின் கொய்ததலை மட்டும்
கதவை அடிக்கடி முட்டுகிறது.

இருள் முளைக்கும் வெளிக்குள்
என் கனவைத்தேட
கதவைத் திறக்கிறேன்...
வெளியிலிருந்து அதை மூடுகிறாய் நீ.

களைப்பற்று இருவரும் காத்திருக்கிறோம்
கதவில் எங்கள் முகங்களைப் பொருத்தியபடி.
.

030320112200

திங்கள், 28 பிப்ரவரி, 2011

அதே சாயல்

-ந.மயூரரூபன்

பரிதியில் ஊரும்
எனக்கான சாயல்களை
பாழடையும் மையங்களிலிருந்தே
நீ வரைகிறாய்.
உனது மையத்திலிருந்து நீளுமாரை
தேகங்களைத் தின்றும்
ஆன்மாக்களைப் புணர்ந்தும்
வட்டங்களை வரைகின்றன.
காலந்தோறும் பரப்புக்குறையா
வட்டங்கள் புனைய
உன்னாலேயே சாத்தியமாகிறது.
நீ நம்பும் தோற்றங்களெல்லாம்
பாழடைந்த மையத்தின்
பொய்மையுள் நனைந்தபடி
அந்த ஒற்றையாரையைப் பின்னுகின்றன.
மீண்டும் மீண்டும் என்னை எழுதவே
உன்னெண்ணப் பொட்டுக்கள் குவிகின்றன.
உனதாரை
இப்பொழுதும் அவர்களால்
யுகந்தோறும் மெய்ப்பிக்கமுயலும்
அதே சாயல்களையே வரையமுடிகிறது.

280220111550

புதன், 2 பிப்ரவரி, 2011

துயரிசையின் அவத்தை


-ந.மயூரரூபன்



நிலத்திலிருந்து உருண்டு திரளும்
வாசனையற்ற எங்கள் வாழ்க்கையின்
பழைய போர்வைகளை
உருவியெறியும் அழுக்குப்படிந்த கைகளில்
சாவீட்டு வாசனையின்
மிச்சங்களே ஒளிந்திருக்கிறது.

பளபளப்பற்று
பல மடிப்புக்களுடன்
எங்கள் காலத்தின் குளத்தில் தோய்ந்து
முதிர்வற்று நீளும் காலவுயிர்ச் சூட்டில்
உலருகிறது போர்வை.
காலம் நடந்ததும்
மிதித்ததுமான வாசனையையே
வாழ்க்கை அதன்மீது ஒட்டிச்செல்கிறது.

பறித்துச் செல்லும் போர்வையின்
சாயமாய்க் கூடித்திரியும்
வாழ்க்கையின் இரகசியம்
நிலத்தின் வெளியெங்கும்
தன் துயரநரம்பினை வைத்து
அதனோசை ஒளிய உறங்குகிறது.

மறைப்பற்ற துயர நரம்பினை
ஒவ்வொரு இராப்பொழுதும்
நினைவு தொலைத்து மீட்டுகிறேன்.
துயரிசையின் அவத்தை
பெருவெளியெங்கும் அவிழ்ந்தோடுகிறது.

020220111540

திங்கள், 31 ஜனவரி, 2011

அவரவர் கணங்கள்


-ந.மயூரரூபன்



உனக்குள் நீ நிறைந்திருப்பதாய்
உன்னைச்சுற்றும் திரைகளில்
சலனப்புள்ளிகள் நிறைகின்றன.
உன் காலடிகளின்
வெற்று வரைவுகளைத் தின்னும்
கணங்களொவ்வொன்றும்
உன் கால்களிலேயே தொங்கிக் கொள்கின்றன.

நினைவு மயக்கும்
எண்ணங்களை அந்தக்கணங்கள்
உன்னைச்சுற்றித் துப்புகின்றபோது
குருட்டுப்புலன் விதைக்கும் கனவுகளே
எங்கும் முளைக்கின்றன.

உனக்குள் நிறைந்திருப்பதாய்
நீ நினைக்குமுன்னை
அவனுக்குள்ளும் எனக்குள்ளும்
இறக்கிக் கொள்வதற்காய்
உன் குருட்டுப்புலன்களை
கணந்தோறும் ஏவுகிறாய்.

அக்கணந்தோறும்
உனக்குள் நீ நிறையும்
வெற்று வரைவுகளில்
மூழ்குகிறாய்.

உன்னெதிரே உன்சுவடுகள்
எரிந்துபோகும் கணங்கள்
மறைந்துபோகின்றன.
அவனும் நானும்
நீயற்ற
அவரவர் கணங்களை வாசித்தபடி
சலனமற்றிருக்கிறோம்.

310120112240