-ந.மயூரரூபன்
நிலத்திலிருந்து உருண்டு திரளும்
வாசனையற்ற எங்கள் வாழ்க்கையின்
பழைய போர்வைகளை
உருவியெறியும் அழுக்குப்படிந்த கைகளில்
சாவீட்டு வாசனையின்
மிச்சங்களே ஒளிந்திருக்கிறது.
பளபளப்பற்று
பல மடிப்புக்களுடன்
எங்கள் காலத்தின் குளத்தில் தோய்ந்து
முதிர்வற்று நீளும் காலவுயிர்ச் சூட்டில்
உலருகிறது போர்வை.
காலம் நடந்ததும்
மிதித்ததுமான வாசனையையே
வாழ்க்கை அதன்மீது ஒட்டிச்செல்கிறது.
பறித்துச் செல்லும் போர்வையின்
சாயமாய்க் கூடித்திரியும்
வாழ்க்கையின் இரகசியம்
நிலத்தின் வெளியெங்கும்
தன் துயரநரம்பினை வைத்து
அதனோசை ஒளிய உறங்குகிறது.
மறைப்பற்ற துயர நரம்பினை
ஒவ்வொரு இராப்பொழுதும்
நினைவு தொலைத்து மீட்டுகிறேன்.
துயரிசையின் அவத்தை
பெருவெளியெங்கும் அவிழ்ந்தோடுகிறது.
020220111540
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக