ஞாயிறு, 11 மார்ச், 2012

ஒளியும் கண இரகசியங்கள்


-ந.மயூரரூபன்

ஆச்சரியங்கள் மிகச் சாதாரணமாய்
நடந்து போகின்றன.
மறைப்பதற்கு ஒன்றுமேயில்லை.
தடித்த இரவு கொட்டிய
மழையின் கத்திகள்
எனது தோலின் பின்னே
புதைந்து போகின்றன.

நினைவு மீள்வதற்காய்
வெளியழைத்த போதும்
இரவுகள் திறந்த 
பிசாசு முகத்தினழைவில்
என்னுயிரின் நிழல்
மறைந்து போனபின்னாய்
அசைவற்றிருக்கிறேன்.

பொழுதுகள் புணரும்
கண இரகசியத்தில்
உலர் செதிற்படையொன்று
உரித்துப் போனது எனது தோலை.
சில்லறைகளாய் உருண்டோடும்
உணர்வுகளில் எனது நிர்வாணத்தின் நாற்றம்
நிணங்களின் மீதலையும்
காற்றாய்ச் சுழன்றாடுகிறது.;

உன்னையும் என்னையும் போலவே
இது ஆச்சரியமற்றது.
புதிய தோலின் வாசனை
அவசரத்ததின் கொடுக்குகளை
செதில்களின் பின் மறைத்துப் படுத்திருக்கிறது.;

நண்பனே!
நீயும் என்னைப்போல
எங்களின் வெளியில் 
இதனை ஒளித்துப்போகிறாயா?

30102011

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சாத்தானின் ஒரே பழம்

-ந.மயூரரூபன்

கை படாத காற்று அது.
பார்வை விழாத நிலத்தில்
படரும் ஒழுங்கே
அதனுச்சியில் அறையப்பட்டது.

மாறுங் காலத்தின்
இருக்கையின் துகள்கள்
ஒளிந்து கொள்வதற்காய்
அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன.

புதைவழியை
வரைந்து கொடுக்கும் பெருமரம்
காற்றின் குலக்குறியமது.

நுனி தெரியாக்
காலத் தொழுகையால்
மயங்கும் காற்றை
கனவுகளால் மிதிக்கும்
ஒற்றைப்பழ மரமது.

நுளை பாவங்களால்
அறுந்து விழும் பழம்
காற்றின் மடியில் மறைகிறது.

அடர் கரங்களுக்குள்
ஆர்ப்பரித்தோடுகிறது காற்று.
எங்கும் கொட்டுகின்றன
அதே புதைதுகள்கள்.

090820111505

புதன், 27 ஜூலை, 2011

பச்சோந்தி மனசு

-ந.மயூரரூபன்

சுற்றிச் சுற்றிக் கத்தும்
பூனைக்குரலின் அசை
மீன் வாசனையற்ற அந்த வெளியில்
வெறுமனே காய்ந்து போகிறது.

ஈரத்தினிடுக்குகள்
ஓடிப்போன சுவடுகளில்
குருதிப்பொட்டுக்கள் மட்டும்
உலர் நிலையழிந்து
அலைவுறுகின்றன.

உடைந்துபோன அம்முட்கள்
வெறுமையின் மடியில் சிதறுகின்றன.

முள் விழுங்கியபின் மனது
மண்டூகமாய் நிறம் மாறுகிறது.
பொழுதுகளின் வெறுமைக் குவியலில்
முக்குளிக்கிறது மிகச் சாதாரணமாய்.

மோட்சம்
இங்கும் மூடப்பட்டிருக்கிறது.

270720111515

வியாழன், 7 ஜூலை, 2011

நீருலகின் நஞ்சு

-ந.மயூரரூபன்

திரவமது தரும் மயக்கம்
நீர்த்துப் போனதாய்
மூலையில் கொட்டப்படுகிறது.
மயக்கப் பொதியாய் வரும்
உணர்வுச் சலனங்கள்
குருணிக் கற்களாய்
வார்த்தைகளின் கரையில்
தட்டுப்படுகின்றன.

அலைகள் செத்த
கடலின் தோணியாய்
உன்னிலெனது காமம்
தனித்தே மிதக்கிறது.
ஆழக்கடலின் அமானுஷ்யத்தில்
விழுந்து போகிறதென் சலனச் சுழிகள்.

இருள் கொத்திய நீருலகில்
மிதக்கிறது என்னுடல்.
காயமீர்த்த கற்கள்
ஒன்றொன்றாய் உதிர்கின்றன.

070720111620

சனி, 2 ஜூலை, 2011

பச்சை வார்த்தைகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

-ந.மயூரரூபன்

மகரந்தத்துள் மூழ்கும்
சந்திப்பொன்றில் எறிந்தேனென்னை.
அசையும் காலத்தைப் புசித்தபின்
அசையாக் காலத்துள்
காய்ந்து முளை செத்த வெட்டையின்
ஒவ்வொரு மூலைகளிலும் தொங்குகிறேன்.

என்னைப் பொறுக்கித்
தன்னைப் புனையும் வார்த்தைகள்
என்னைச் சுற்றிப் பறக்கின்றன.
பச்சையிலைகளாய் நிறைய
இறகு முளைக்கும் புழுக்கள்
பச்சை வார்த்தைகளைத் தின்னுகின்றன.

எஞ்சிய காலத்தின் ஓட்டைகளில்
தொங்கும் என் மீது
வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன.
சூடு முளைக்குமிந்த வெட்டையில்
பறத்தல் மறந்து
வண்ணச் சிறகுகள் விழுகின்றன.

020720111450

திங்கள், 27 ஜூன், 2011

கசங்கும் காலம்

-ந.மயூரரூபன்

எங்கள் நடைச் சேற்றில்
சாத்தான் விதைகளின் முளை.
உழக்கும் கால்களைத் தடவி அது
அங்கக் கொடியாய்ப் படரும்.
நிலத்தின் படுக்கைகள்
ஒவ்வொரு இராப்பொழுதிலும்
கசங்கிப் போகிறது.

அந்தரங்கத் துணையொன்று
இரகசியங்களில்
பறந்தோடும் மின்மினிகளைப்
பிடித்தொட்டுகிறது.
மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால்
கரைந்து போகிறதெல்லாம்.

சாத்தானின் பொழுதுகளில்
ஒளிப்பேதம் எங்கே?
ஆச்சரியங்கள் மயங்கிய
சாதாரண நாளொன்றில்
நிரந்தரமாயிற்று நிர்வாணம்.

நிலத்தைப் புணருமுடல்களின் கீழ்
கசங்கிப் போகிறது காலம்.

250620111550

வெள்ளி, 10 ஜூன், 2011

காளான் முளைத்த வெளி

-ந.மயூரரூபன்

என்னைத் தொலைத்துத் திரியும்
அந்தக் காற்று
வெளிச்சம்  பூசிய தன்பொழுதுகளை
மறந்தே போனது.

நான் கலைந்தபின்
தான் மிதக்கும் வெளிகளை
கீறிக் கீறி
இரவின் நார்களையுரித்து
ஒளிந்து கொள்வதற்கான
மாயையொன்றை வரைந்து கொள்கிறது.

நீலக் காளான்முளைத்த வெளிகளில்
எனது இலட்சம் புள்ளிகளும்
கோடிகளாயுடைந்து போயின.
காற்றிலொழுகிய
மூச்சில் அள்ளுண்டுபோகும் நான்
பலவாய்
மிகப்பலவாய்
அந்தக் காளான் வெளிகளில்
புதைந்து கொண்டிருக்கிறேன்.

100620112030