வியாழன், 28 ஏப்ரல், 2011

கருவனக் குழி




-ந.மயூரரூபன்

நிறங்கருத்த குழிக்குள்
உங்கள் தலைகள் ஒளிந்திருக்க
குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில்
மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள்.
ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால்
கருவனம் ஒன்று மிதக்க
தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன.

கருவனக்குழிகள் நிறையும் பாதையே
என்கால்களின் கீழ் திறந்துகொள்கிறது.
மேலிமை மடல்களில்
தீவட்டியேதுமற்ற நீற்றுப்படுகையின்
துக்கவயிற்றுப்பாரம் ஏறிக்கொள்கிறது.

இருகைகளிலும்
குழந்தைகள் தொங்கிக்கொள்கிறார்கள்.
அந்தரத்திலாடும் கால்களை
கருவனத்தின் நாக்குகள் தீணடப்பாய்கின்றன.
காற்றெரிய குழந்தைகள் அலறுகின்றன.
அலறலின் வெந்த மணத்தில்
எனதுடல் மேலிமை நீற்றுப்படுகையில்
தலைசரியக் கவிழ்ந்துபோகிறது.

கருவனத்தின் இலைக்கடலில்
குழந்தைகள் தத்தளித்தபோது
எனது தலை
உங்கள் குழிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறது.

280420111540

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சூரியசாட்சி


-ந.மயூரரூபன்


சூரியனின் கீழாக
எனது நிழற்கீறல்களை
உரித்துச்சுருட்டுகின்ற 
வியர்வைப் பொழுதுகளில்
என்னை விலக்கி நடந்தன
என் கால்கள்.


சலனம் வற்றிய
நிழற்சுருளுடன் தொற்றியிருக்கும்
வெறுங்கிடங்காய் என்னுடல்
ஒற்றைக் காகமொன்று
வெறித்திருக்கக் காய்ந்துபோகிறது.


உணர்வுகளிலூறிய கால்கள்
கருநாகம் கொத்திய 
இரவுகளிலேறிச் செல்கிறது.
நஞ்சடரும் இருள் மிதித்து
என்வீட்டு முனைகளில்
நோக்கற்று அமர்ந்தழுகிறது.


பறையொலி கொட்டுண்டோடும்
நிலத்துவழியில் போகுமென் கால்கள்
அதிருமோலங்களோடு அடைந்திருக்கிறது.
தலையறுந்த மரங்களைச் சுற்றி
எரிகனவுகளின் சாம்பல் படிந்துகொண்டேயிருக்கிறது.


மொட்டைமரத்தில்
என்கால்கள் தொங்கும் அலைபொழுதொன்றில்
சூரியனின்கீழ் முற்றுமுழுதாய்
நான் தொலைந்துபோனேன்.


190420112230


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வரிக்காடு

-ந.மயூரரூபன்

வானம் தனக்கான
நிறங்களைப் பெய்துகெண்டிருக்க
அந்தக்காடு அசைவற்று
அங்கேயே விரிந்திருக்கிறது.
வெறும் வானத்தினெஞ்சிய நிழல்கள்
கறுத்தெரிந்த போதும்
நீறிச் சாம்பரானபோதும்
தூசிபடியும் தன்வார்த்தைகள்மீது
துடிப்பற்றே படுத்திருந்தது அக்காடு.
வானத்தின் புன்னகைகள்
கொட்டியபோதும்
அதனழுகைகள் அலைந்தபோதும்
காட்டின் உணர்கொம்புகள்
மறைந்தேயிருந்தன.
நீங்கள் வரைந்து கொழுவியது
எனக்கான காடு்.
வானமொடிந்த எனக்குள்
பெரும்பாறையாய்ப் படுத்தருக்கிறது
உருவற்ற அந்த வரிக்காடு.

170420112210

புதன், 6 ஏப்ரல், 2011

பேய்த்தேர் வீதி

-ந.மயூரரூபன்

வீதி வெயிலில்
காய்ந்து சுருண்டிருக்கும்
உலர்ந்தபின்னும் காற்றதன் மேல் 
தொங்கிக்கொண்டிருக்கும்.
பேய்த்தேர் ஆடியசையும்
சலனங்கள் மட்டும்
வீதியில் விழுந்துகொண்டிருக்க
இமை பொசுங்கிய கண்கள்
குலுங்கும் பையொன்று
மேற்குருட்டு வளைவில்
சோம்பியசையும்.
பேய்த்தேர் இழுத்துவரும்
ஒப்பனை வெள்ளமொன்று
வீடு தேடியிறங்குகிற உலர்பொழுதுகளில்
ஒவ்வொன்றாய் பைவிழிகள் விழும்.
ஊறிக்கலைந்த ஒப்பனையில்
காய்ந்தெரியும் காற்றறைய
பேய்த்தேரெழுதிய வாசல்கள்
சலனமற்று எங்கும் திறந்துகொள்ளும்.
புலனழிய ஓடும் தலையொன்று
விறைத்தலையும் வீதியில்
தன்விழி தொலைத்தோடும்.

060420112250


சனி, 2 ஏப்ரல், 2011

அம்மனை

-ந.மயூரரூபன்

நீரில் குளிக்கும் ஈரமாய்
எண்ணங்களை நனைக்கும் வார்த்தையை
அடிக்கடி அழைகிறேன்...
அம்மா!

காற்றில் நீயசைந்த கொடி
காய்தல் தொலைத்து
இன்னமும் என்னுரு வரைவதாய்
சடமொன்று கத்திப்போனது.

இன்னமும் தொற்றித்தொடரும்
உன்மடி புதையுமாசை
காற்றிலேறி திக்கற்றலைகிறது.

ஏழாய்ப்பிரித்த முட்டைப்பொரியலாய்
வார்த்தைகள் கூறுபட்டு
வரியடர்ந்த உன் முகத்தைச்சுற்றிச்
சுழன்றோடுகிறது மெய்ப்பொருள் தொலைத்து.
அம்மனை உன்பொருளே
நிறைகிறதெங்கும்.
பசியும் கவலையும்
என்னையணைக்க முடியாவெறுப்புடன்
உனக்குள் அடைந்துபோனது.
அவை உன்னுடல் தின்னுமிருளில்
தூங்கிப்போயின பொழுதுகளும்.

மெய்மையுடைபடும் கணங்கள் நிறைய நிறைய
என் வார்த்தைகள் தொலைந்துபோகின்றன.

020420111430