வெள்ளி, 25 ஜூன், 2010

குழந்தைகளின் கனவு


-ந.மயூரரூபன்

ஊதி ஊதி மூட்டுந்தீ
குழந்தைகளினுலரும் கனவுகளின்
நுளைவழி தேடிச்சதிராடி
மரவிருள் பிணைந்து தொங்குகிறது.

குழந்தைகளின் கனவுகள் பார்த்திருக்க
ஓடிக்கொண்டிருக்கிறது
அதனீரம் பறித்த மாய ஆறு.
தகிக்குமெங் கனவுகள் தொடமுடியா
மாய ஆறு அது.

ஈரந்தொலைத்த சேதி
ஆற்றுப்படுகையில் விழுந்து
முட்கம்பியோரமாய் திக்கற்றலைகிறது.
மரவிருள் தின்னச் சுருண்டிருக்கிறது.

கனவுகள் உலருமோசை
வண்ணங்கள் புதைந்துபோன
நிலமெங்கும் கேட்கிறது.
மாய ஆற்றின் சலசலப்பும்
உதிர்ந்தழிகிறது.

ஓசைகளுடையும் சடசடப்பில்
மரவிருள் மிடைத்து வருந்தீ
வகுந்தேறுகிறதெங்கும்.
கனல் கக்கும் பொழுதொன்றில்
குழந்தையின் கனவுகள்
தீயில் நனைகின்றன.

வெள்ளி, 18 ஜூன், 2010

குளங்கள் ஊறுகின்றன


--ந.மயூரரூபன்

ஓரம்பிடித்து இழுக்கிறேன்
 நினைவுகளின் செவ்வலியெலாம்
வந்துவிழுகிறது
எனக்குள் ஊறும் இந்தக்குளத்தின்
இரகசியங்களெல்லாம்
விழிமுன் ஒளிக்கும்
ஓரங்களில் படுத்திருக்கிறது.

வந்தணையும் எனக்கான சொற்கள்
செங்களியழைந்து ஊர்கிறது
என்மொழிபிணைந்து
மடை கரைந்தவெண்ணத்துள் சரிகிறது.

இரும்புருளைத் துண்டுகள்
தீயுருக்குக் குண்டுகள்
பெருக்கியிறைத்த செங்களியும்

வளைந்துயிர் அரக்கிய
நினைவு மறுகும் எரிதடங்களும்

உன்னிண வாடை
குவிந்துறையும்வெண்திரைக்குள்
திணிந்து மடங்காதெழும் எப்போதும்.

என்குளம் பெருகும்
காலங்களைச் சபிக்காதே.
பிணச்சீலையெரியும்
எங்களின் கனவுகளைப்பின்ன
இன்னமும் ஓரங்களை இழுக்கிறேன்.

நண்பனே!
உன்முன்னேயும் கண்டுகொள்
நிணவாடை வீசும் ஓரங்களை.
உன்குளமும் காத்திருக்கிறது...





புதன், 16 ஜூன், 2010

நரனெரி கங்கு


-ந.மயூரரூபன்


பேய்கள் தின்றெறிந்த
கொட்டைகள் முளைக்கும்
காலமொன்றின்
உருவிலா வனத்தீயினுள்
கூப்பிய கையுடைந்து
கெஞ்சிய வாய் கிழிந்தடங்கினர்.

உருவிலா வனம் மூட்டும்
நரனெரி கங்கின் புகை
வெளியிடை கசிந்து
மருளும் காற்றுடன் கலக்க
மலக்குழியில் மிதந்தனரென் சோதரர்
உயிர் தொலைத்த புள்ளிகள் கலைய.

நேற்றின் கூர் முனைகள்
காற்றைக் கீறிச்சிவந்தன.
ஒடிமுனை புதைந்த காற்று
அலறிச் சுழன்றோடுகிறது இன்றும்.
கிழிந்து சடசடக்கிறது எங்களின் காலம்.

நரனெரி கங்கின்
புகை சூழ்நிலத்துள்
அள்ளுண்டு போகிறது வாழ்க்கை.
உருவிழந்து தீய்கிறோம் நாம்.

செவ்வாய், 15 ஜூன், 2010

சித்து

-ந.மயூரரூபன்


அசையும் காற்றிலுடைந்து பரவும்
நீருந்தியெழும் பறவையின் சாரலாய்
என்னுலவு கணங்களின்
வனத்தாளுடைந்து கொள்கிறது.
சிறுபறவைகளின் குலாவுகுரல்
நுழைந்தென்னுள் வழிகிறது

என்னுள் பெருகுமுன்னால்
என்னுதிரா வண்ணம்
சுடரேறி விண்ணளைகிறது.
வண்ணவான் படைக்கவெனை
உந்துமுன்னால் இறைகிறதென்னுள்
இம்மை பெருக்கும் சித்து.

திங்கள், 14 ஜூன், 2010

பதற்றம்

-ந.மயூரரூபன்


காற்றுள் குழையும் இருள்
ஈரமாய்த் தன்னுயிர் விரித்து
என் கனவுவெளி மூடிப்பின்னுகிறது
பகல்களற்ற பொழுதுக்குள்
விழுந்து கொண்டிருக்கும்
நினைவுகளின் சொட்டுகள்
மெதுவாய் என்னுயிர் கரைக்க
அழுதலையும் இராக்குருவியின்
பதற்றம் தொற்றித் தொடருகிறதெங்கும்.

வெள்ளி, 11 ஜூன், 2010

விடைத்தலையும் காந்தல்

-ந.மயூரரூபன்


சுற்றிச் சடையும் காந்தல்
தகரத் தடுப்பேறி உடல் வெம்ப
என்னுயிர் விழுங்கிப் படுத்திருக்கிறது - பின்
வயிற்றுள் விடைத்து நெடுக்கிறது.

நினைவுகளின் பசுந்தழல் பொசுங்கும்
தீங்கனவே காற்றுக்கும் தெரிந்திருக்கிறது.
எட்டநின்று தன்சுவடெறிந்து
உயிரழையக் காத்திருக்கும் நாயொன்றின்
மூச்செறிவு மட்டும் முளைக்கிறது.

பசியைக் குதறக்காத்திருக்கும்
குறியொன்றின் நிழல் நிலநடுவில்
நின்று நெடுத்தலைகிறது.
உயிரழையக் காத்திருக்கும்
மூச்செறிவுகளின் வெம்மை
ஊர்ந்தேறுகிறது எங்கும்.

வியாழன், 10 ஜூன், 2010

உயிர் வளையம்

-ந.மயூரரூபன்


வார்த்தைகள் நெருங்கா
வளையத்துள் எங்கள் உயிர்
படுத்திருக்கிறது சோர்ந்து.
நீயெறியும் சொற்கள்
உணர்வுகளறுந்து அம்மணமாய்
திசைகளற்று ஓடியலைகிறது.

எங்களுக்கான சொற்களை
எண்ணியெண்ணி அடுக்குகிறேன்
உயிர் வளையத்துள்.
ஒலிதின்னும் பேய்ச்சுழலொன்று
புலன்மயக்கி ஓடித்திரிகிறது.

உனதுமெனதுமான சொற்கள்
உலர்ந்தபின் உடைந்துபோய்
சத்தமற்று எரிகின்றன.
ஒலியறுந்த நெருப்பினைப் பார்த்தபடியே
படுத்திருக்கிறது எங்களுயிர்.

திங்கள், 7 ஜூன், 2010

அலைவு

-ந.மயூரரூபன்


என்னிலத்து வெளியில் நடக்கிறேன்
புன்னகையில் தொற்றியிருக்கும்
பரிச்சயங்களின் முகம்
ஆழப்புதைந்திருக்க
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...
அந்நியனாய்த் தெரியும் என்முகம்
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...
முகமற்று எனது வெளியெங்கும்
நடந்தலைகிறேன்.