புதன், 21 ஏப்ரல், 2010

அவிழ்

-ந.மயூரரூபன்



தானாய் அவிழும் முடிச்சுகளில்
முட்டித் துடித்துவரும் ஓலங்கள்
என்காலடிகளைத் தேடி
ஓடிவருகின்றன.

அடக்கம் செய்யப்படாததாய்
சாவறிவித்தல் கொடுக்கப்பட்ட ஓலங்களில்
மரணத்தின் உறவினைக் காணமுடியவில்லை.

எனது முடிச்சு அவிழும் பொழுதுகளில்
அதன் உயிர்ப்பின் கூர்மையை அனுபவிக்கிறேன்
ஓரங்கள் சீவப்பட்ட எனது காலடிகள்
இரத்தத்திலே தோய்ந்திருப்பதாக
அம்மா அழுகின்றாள்.

நான் எனது மண்ணில் நடக்கிறேன்...
வெளியெங்கும் சிவப்பாகும் காலத்தை
நான் என சந்ததிக்காய் வரைந்து கொள்வதாக
நீ சொல்வது எங்கும் கேட்கிறது.

மண்ணின் முடிச்சுகள்
உனக்குள்ளும் அவிழ்ந்து கொள்ளும்.
விட்டு விடுதலையாகும்
ஓலங்களின் தரிசனத்தினை
அப்போது நீயும் வரைவாய்.


17042010

திங்கள், 19 ஏப்ரல், 2010

எரியும் உணர்வும் உதிரும் வர்ணமும்

-ந.மயூரரூபன்

கொலுசுக்குள் உறங்கும்
ஓசைகள் விழிக்குமென
மனமெங்கும் துடிப்புக்கள் உலவும்.
ஓயாத நெஞ்சறையின் படபடப்பு மட்டும்
ஓய்ந்து போன உடலில்
உன்னிப்பாய்க் காதுமலர்த்தும்.

தொலைந்தது கொலுசா கொலுசின் ஒலியா?
புரியாத சூனியத்துள் பார்வை தொலைத்து
பரதேசியாய் அலைகிறது என்னுணர்வு.

முடிந்தவற்றின் வர்ணங்களின்னும் காயவில்லை
ஈரமின்னும் பிணைவறுக்காததாய்
குழைந்து என்னைப் பற்றுகிறது.
ஓர் வாசனை எங்கும் மிதக்கிறது.

ஓசைகளின் விழிப்பில் பதிந்து கிடக்கிறது
என் உயிரின் பார்வை.
வர்ணங்களின் குழையலை மனது நுகர்கிறது...
வாசனையின் ஈர்ப்பில்
வர்ணங்களில் விழுந்தன விழிகள்.
ஓசைகளின் சிலிர்ப்பில்
வர்ணங்களை வழித்தேன்...
உதிர்ந்தன வர்ணங்களெல்லாம்
கருமையாய் ஈரமற்று.


18112001

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அணையும் நிழல்



-ந.மயூரரூபன்

ஒற்றைக் கிரீச்சிடலால்
காற்றின் மௌனத்துயில்
அதிர்ந்து கலைகிறது.
இராக்குருவியின் இந்த ஞாபகம்
அடிக்கடி நினைவுள் மீள்கிறது.

சுடராய் எரிந்தும் 
சுடர்களாய்ப் பிணைந்தும்
சூரியனின் கிழக்கைத் தொடரப் பிறந்தவன்  
பொந்தில் அடைந்து புகைந்தவியும் 
அக்கினிக் குஞ்சாயானேன்.

தாலாட்டில் வளரும் துயிலாய் 
தன் கனவைத் திரட்டி
எனக்காய் நினைந்து
உயிர்பொசியும் அம்மா…

அவள் நினைவு
காற்றில் படிந்திறங்கும் 
விம்மலற்ற தாலாட்டாய் 
என்றும் எனக்குள் இருக்கட்டும். 
அவளுள் என் நினைவு
விளக்குச் சுடரில் துடிக்கும்
நிழலாய் மட்டுமே இருக்கட்டும்.

ஒற்றைக் கிரீச்சிடல் நிற்காமல்
மீண்டும் நீழுகிறது அவலமாய்...
இன்றும் வருகிறது
இராக்குருவியின் அந்த ஞாபகம்.

இருள் சூழ்ந்த பொழுதுகள் 
கரையும் நியதியற்று
நீழுகிறது முடிவற்றதாய்.

23042001

சனி, 17 ஏப்ரல், 2010

தனிமை

-ந.மயூரரூபன்


முறைக்கிறதா என்னைப் பார்த்து
சிரிக்கிறதா என்னைப்பார்த்து
ஒன்றுமே புரியவில்லை
அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்
பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே
விரோதமாய்ப் பார்க்கின்றன
என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்
ஒட்டியிருப்பது பயந்தானோ?
பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?
என்னுள் துடிப்பு ஏறிக்
குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்
கனவுகள் நெருக்குகின்றன.
கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்
அருட்டிப்பார்க்கிறது என்னை.
ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்
உடல் வறட்டக் கத்தும் சத்தமும்
மூச்சழிக்க வைக்கும் என்னை.
கொப்பில் குதிக்கும் தாட்டானும்
தேடித் திரிவது என்னைத்தான்.
ஊத்தை இளிப்புடன்
ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்
உயிர் கொழுவித் தவிக்கும்.
நான் போகுமிடமெல்லாம்
நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.
காகமும் தாட்டானும் கூடத்தான்.
அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்
நான் மட்டும் தனியே.


08042001

காலமும் நானும்

-ந.மயூரரூபன்

நான் பார்த்த மரங்களெல்லாம்
நன்றாய் வளர்ந்துவிட்டன.
இலைகள் மஞ்சளடித்து...
இறந்து... மீண்டும் மீண்டும்
பச்சைகளாய்த் துளிர்த்தும் விட்டன.
துளிர்க்கவும் தொடங்குகின்றன.
காலம் கடந்து செல்கிறது...
நான் மட்டும் அப்படியே னெ; நினைவுகளுடன்.

தூரத்தேகேட்டு
என்னைத் தேடிக் கசிந்துவரும்
சங்கொலியில் என் காலடிகள் மிதந்து
மண்ணொழுங்கையில் ஏறிச்செல்கின்றன.
முழுக்கைச் சட்டைகள் சினமூட்டும்
மார்கழிக் குளிரில் அதிகாலைக்கு முன்னே
விழித்துவிட்ட களிப்புடன்
எம் நடையோடசைந்து லாம்பும் எம்முன்னே
தொடர்ந்து வரும்.
வைரவர் கோயில் வாசலில்
திருப்பாவைப் பாட்டும்
ஒழுங்கை நாய்களின் குரைப்பும்
சங்குடன் ஓடிக்கலக்கும்.
காலைகள் இப்படிக் கலைய
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

மணலொழுங்கை கடந்து
மதகேறி மிதக்க வரும் எனது பள்ளியும்
குச்சொழுங்கை முழுதும் குவிந்து கிடக்கும்
எனது காலடிகளும்
மீண்டும் மீண்டும் கனவாய்ப் படிகின்றன.
நீண்ட பொழுதுகள் என் நடைபோல் கழிகின்றன.
முழுதாய் என்னைத் தன்னுள்ளே நிறைத்து
மூச்சுக்களால் நிறைந்து
மகிழ்வால் முட்டிய எங்கள் வீடு...
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

நம்பிக்கையூட்டும் பொழுதுகளைக் காவிக்
காலம் நடந்து செல்கிறது.
மரங்களின் பருவமாற்றம்
என்னிலும் படர்ந்து செல்கிறது.
மணலொழுங்கையின் தவிப்பு
தன்மூச்சினை என்மீது
எறிந்துகொண்டேயிருக்கிறது.
இப்போது காலம் கடந்து செல்கிறது...
என்னைத் தனியே விட்டு.


13012001

திங்கள், 12 ஏப்ரல், 2010

உயிர்ப்பின் ஒலி

-ந.மயூரரூபன்


வாழ்வின் ஆழத்தை வியக்கும் ரேகைத்தனமாய்
எம்முகவரிகள் வேர் நிறைத்தன.
வாழ்வின் பதிவுகளுடன்
எண்ண அடுக்குகளில் மாட்டிக்கொண்டு
உசாவும் உறவுக்கிளையாய்
சாவரை தழைக்கும் மண்ணின் நினைப்பு.

மண்ணின் நினைப்பு
சொந்தங்களைச் சுமந்ததால்
சுகித்திருந்தது பூரிப்பாய்.
முலையூறி விம்மும் தாய்மையாய்,
மூண்ட நினைவுகளுடன் முட்டிக்கொண்டு
பாசங்களைச் சுமக்கும்
பிஞ்சுகளாய் நாமன்று
தளர்நடையிட்ட தாய்மேனி.

தாய்மேனியின் உயிர்நாடி
ஓடுமுடல் எங்களது
புதையும் மணலில் பாவித்திரிந்த பாதங்களுடன்
கதைபேசிக் காத்திருந்த கரைவெளி
எல்லாம் எங்களது.

எங்களது சுரண்டப்படும் நினைவுகளால்
துன்பங்களாய்க் கரைந்தன பொழுதுகள்.

ஆசை பொதிந்த மண்ணுக்காய்,
உயிர்ப்பைப் பொழியும் வெளிக்காய்
ஆவிகலந்து உப்புக்காற்றுடன்
அசையும் எம்முயிர்க் கணுக்களின் கனவிது.

கனவி; வெளிகள் திரையின்றித் தூலமாய்...
விரியும் பொழுதுகள் நம்மண்ணிலும் படிந்தன.

முழங்கிய சங்கநாதத்தின் ஒலி
முடியாமல் அலையாய் நீண்டிங்கு
வெம்பித்தகித்த வெளியெங்கும்
உயிர்ப்பாய் ஒலித்தது.

மீண்டும்
புதையும் மணலில் பாவித்திரியும் பாதங்களுடன்
கதைபேசிக் களித்திருப்போம்.


நிலம் இதழ்-3 (2001)

புதன், 7 ஏப்ரல், 2010

பார்த்தவர் யாருமில்லை

-ந.மயூரரூபன்



வாய்ப்புப் பார்த்திருக்கும் தெருவில்
எனது காலடிகளைத்தேடி
ஓர் நினைப்பு இறங்கியலைகிறது
என்னைத் தவிர்த்து.

விழிகள் மயங்கும்
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்
நினைவைக் களைந்து
திகைத்திருக்கும் எனக்குள்
நுழைந்து சுருண்டுகொள்கிறது
என் நினைவு தின்ற அத்தெரு.

நான் நடந்தலையும் வெளியில்
மெதுவாய்த் தெரு
சரிந்திறங்கியதை
கண்டவர்கள் யாருமில்லை....

வெளியெங்கும்
பழமையின் வீச்சமாய்
என் கனவுகள் மட்டும்
படிந்திருப்பதைக் கண்டதாய்ப்
பேசிக்கொண்டார்கள் எல்லோரும்.

07042010

திங்கள், 5 ஏப்ரல், 2010

மிதப்பு


-ந.மயூரரூபன்


அது ஆனந்த சயனம்
அண்டசராசரமும்
கனவுகளின் மிதப்பில்
கரைந்துகொண்டிருக்கும்

கவலைகள் தேடிவருவதும்
காலங்கள் துரத்துவதும்
கண்களின் இமைகளில்
தடைப்பட்டுவிடும்

இமையிறுக்கிப் பால்குடிக்கும்
பூனைக்கெங்கே தெரியும்,
வானத்தின் முகடெங்கும்
விழிகள் முளைத்திருப்பது?